சென்னை:
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நரம்பியல் பிரிவு கட்டிடத்தின் 2வது தளத்தில் பிடித்த தீ, மளமளவென பரவியது. இதனால் கட்டிடம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மருத்துவமனை கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 2 ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது. தீயை அணைக்கும் பணி சவாலாக இருந்ததால் கூடுதலாக தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணி நடைபெறுகிறது. நோயாளிகள் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அறுவை சிகிச்சைக்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ கட்டுக்குள் வந்தபிறகு ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
‘பழைய கட்டிடங்களில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. புதிய மூன்று பிளாக்குகள் பாதுகாப்பாக உள்ளன. தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து நோயாளிகள் உடனே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டனர். தீ விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். உயர்தர தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. டவர் 3ல் எந்தவொரு நோயாளிகளையும் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.