புதுடெல்லி: டெல்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பல மணி நேரப் போராட்டத்திற்கு பின்னரே அணைக்கப்பட்டது. இதனால் தலைநகர் முழுவதுமே புகை மண்டலமாக மாறியது.
டெல்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ பரவியது. இதன்காரணமாக தலைநகர் டெல்லியே புகை மண்டலமாக மாறியது. குப்பை மலை போல் குவிந்து கிடந்ததால், அங்கு தீப்பற்றி எரிந்தபோது ஒரு மலையே தீ பிடித்து எரிந்தது போல் காட்சியளித்தது. இந்த நிலையில் தீயை அணைக்க மீட்புப் படையினர் விரைந்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் (டிபிசிசி) சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு, கிழக்கு டெல்லியின் காஜிபூர் குப்பைக் கிடங்கில் மூன்று தீ விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் மார்ச் 28 அன்று நிகழ்ந்த தீ விபத்து 50 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே அணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.