புதுடெல்லி: தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
இதுபோலவே தஞ்சை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
தஞ்சை மாவட்டம் பூதலூர் சாலை அருகே களிமேடு அப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.