தேர்வுக்குழுவில் இருந்து என்னை நீக்குங்கள் ; நடிகர் கோரிக்கை

மலையாள சினிமாவில் காமெடி கலந்த குணச்சித்திர நடிகர்களில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்றவர் நடிகர் இந்திரன்ஸ்.. தனது வித்தியாசமான டயலாக் டெலிவரி மற்றும் பாடி லாங்குவேஜால் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களை சிரிக்கவைக்கும் திறமை கொண்டவர்.. தமிழில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடிகர் இந்திரன்ஸ் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஹோம்ஸ் திரைப்படம் இவரது பண்பட்ட நடிப்பை இன்னும் வெளிச்சம்போட்டு காட்டியதால் தற்போது இவர் கைவசம் ஒரு டஜன் படத்திற்கு மேல் வைத்துள்ளார்.

அதுமட்டுமல்ல கேரள அரசின் திரைப்பட விருதுக்கான தேர்வுக் குழு கமிட்டியில் முக்கிய உறுப்பினராகவும் இவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென கமிட்டிக்கு கோரிக்கை விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளார் இந்திரன்ஸ். பலரும் இந்த கமிட்டியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்காதா என காய் நகர்த்தி வரும் வேளையில் இந்திரன்ஸ் தனக்கு கிடைத்த பொறுப்பை வேண்டாம் என கூறியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அதேசமயம் இதுபற்றி இந்திரன்ஸ் கூறும்போது, “தேர்வுக்குழு கமிட்டிகள் இருப்பதால் தான் நடித்த பல படங்கள் விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ளும்போது தனக்கும் சம்பந்தப்பட்ட பட குழுவினருக்கும் இதனால் தர்மசங்கடம் ஏற்படுகிறது. நான் இந்த குழுவில் இருப்பதாலேயே தான் நடித்த பல நல்ல படங்கள் இந்த போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை அல்லது விருது பெறும் வாய்ப்பையும் எதற்காக இழக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் இந்திரன்ஸ். மேலும் தன்னால், தான் நடித்த படங்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் செயல்பட முடியாது என்பதாலும் இந்த பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.