வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால் : மத்திய பிரதேசத்தில், ”நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிக்கு, மாதந்தோறும் 900 ரூபாய் வழங்கப்படும்,” என, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்து உள்ளார்.
மத்திய பிரதேசத்தில், இயற்கை விவசாயம் தொடர்பான ‘நிடி ஆயோக்’ தேசிய பயிலரங்கு, நடந்தது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியதாவது: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, மாநில அரசின் இயற்கை வேளாண் மேம்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இயற்கை விவசாயத்திற்கு நாட்டு மாடுகள் அவசியம். இதன்படி, ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு நாட்டு மாடு வளர்க்க வேண்டும். அவர்களுக்கு, மாதந்தோறும் 900 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளோம்.

மாநிலத்தின் 52 மாவட்டங்களில், தலா 100 கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு சிறப்பு நடவடிக்கைகளை துவங்க உள்ளது. மாநிலத்தில், இதுவரையிலும், 1.65 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி உள்ளனர். இயற்கை விவசாய சூழலை உருவாக்க, பயிலரங்குகளும் ஏற்பாடு செய்யப்படும். நர்மதா ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வயல்களில், இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement