பீகாரில் திருமண விழாவில் மாப்பிள்ளை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உட்பட 3 உறவினர்கள் காயமடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா நகரில் வசித்து வருபவர் 18 வயதேயான இளைஞர் ரவிசங்கர் குமார். இவருக்கு வரும் மே 2 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு முன்பாக திருமண சடங்குகளில் ஒன்றான “திலகம்” விழாவிற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மாநில தலைநகர் பாட்னாவிற்கு மேற்கே 50 கிமீ தொலைவில் உள்ள பலுஹிபூர் பகுதியில் இவ்விழா நடைபெற்றது. மணமகனின் குடும்பத்தினர் ஒரு இசை நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தனர். இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
மணமகன் ரவிசங்கர் அவரது நண்பர்களுடன் இணைந்து வானத்தை நோக்கி துப்பாக்கியை நோக்கி சுட ஆரம்பித்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சுதாரிப்பதற்குள், அவர்களை நோக்கியும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மாறி மாறி நண்பர்கள் சுட்டுக் கொண்டதில் மணமகன் ரவிசங்கர், அவரது உறவினர் லல்லு குமார் மற்றும் 12 வயது சிறுவன் கரண் குமார் ஆகிய மூவருக்கு காயம் ஏற்பட்டதால், மூவரும் ஆரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மணமகனும் அவரது நண்பர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று போஜ்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) வினய் திவாரி கூறினார். காயங்களை ஏற்படுத்துவதைத் தவிர, சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாமே: பத்தாண்டுகளாக உ.பி காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய்க்கு பிரியாவிடை! வீடியோ வைரல்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
