மாணவ, மாணவிகளுடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அதில் மாணவிகளின் கேள்விகளுக்கு கனிமொழி பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி, “ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்னீர்கள், எப்போது மதுவிலக்கு அமலுக்கு வரும்? தந்தை, அண்ணன், தம்பியின் மதுப்பழக்கத்தினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது” என்று கேள்வி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த கனிமொழி, “இந்தத் தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஒரு உறுதிமொழியையும் கொடுக்கவில்லை. மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம் என்றுதான் சொன்னோம். அது நடக்கும்” என்றார்.
“மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்யும் காவலர்களே, அதனைப் பயன்படுத்தி வருகிறார்களே.. அதற்காவது தீர்வுகிடைக்குமா?” என்று மறுபடியும் அம்மாணவி கேட்டார். “மதுக்கடைகளுக்கு மது வாங்க வருபவர்களுக்கு 18 வயது ஆகிவிட்டதா? என்று பார்த்து மட்டுமே மது வழங்கப்படும். மற்றபடி, என்ன தொழில் செய்கிறார்கள் என்றெல்லாம் பார்த்துக் கொடுக்க முடியாது” என்றார் கனிமொழி. கனிமொழி பேசுவதன் வீடியோவை அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதுபற்றி அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் கேட்டபோது, “படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் கதைதான் இது. சொல்வதையும், சொல்லாலததையும்கூட செய்வது, அதுதான் அ.தி.மு.க. ஆனால், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதுதான் தி.மு.க.
மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என ஸ்டாலினும் சொல்லியிருக்கிறார், தேர்தல் அறிக்கையிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பு ஒருமுறை கனிமொழிகூட, ’தி.மு.க ஆட்சி அமைந்தால், அனைத்து சாராய ஆலைகளையும் மூடிவிடுவோம்’ என்று பேசினாரா இல்லையா? அதற்கு என்ன பதில்? ஏனெனில், மொத்தமுள்ள 13 மது ஆலைகளில், நான்கு ஆலைகள் ஜெகத்ரட்சகனுக்கும், 3 ஆலைகள் டி.ஆர்.பாலுவுக்கும் சொந்தமானது. தி.மு.க சார்புடைய ஆலைகளையும் சேர்த்து, மொத்தம் 9 ஆலைகள் தி.மு.க தரப்புக்கு உரித்தானதுதான்.
மது ஆலைகள் மூடப்படுமா? என்று கேட்டால், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொன்னதுபோல, ‘எந்த ஆண்டில், எந்தத் தேதியில் மூடுகிறோம் என்று சொன்னோம்?’ என்றுகூட கேள்வி கேட்பார் போல கனிமொழி. ஏழைப்பெண்களுடைய தாலியை அறுக்காமல் தங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதுதான் தி.மு.க-வின் எண்ணம்!
2003-ல் அ.தி.மு.க ஆட்சியில்தான் டாஸ்மாக் கொண்டுவரப்பட்டது என்றாலும் அதில் ஒரு சமூக நோக்கமும், நியாயமும் இருந்தது. தனியாரிடம் மது விற்பனை இருந்தவரை ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டும் வளர்ந்தனர். கள்ளச்சாராயமும், போலி மதுவும் கரைபுரண்டோடியது. அதனால், அதை ஒரு முறைப்படுத்தவே தமிழ்நாடு வாணிபக் கழகம் என்ற நிறுவனத்தை அமைத்தார் ஜெயலலிதா. இதனால் கிடைக்கும் வருவாயை விட, மக்களுக்கானத் தீங்குகள் இருப்பதை உணர்ந்துதான், 2016-ல் ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்தில் 500 மதுக்கடைகளை மூடினார் ஜெயலலிதா. அதன்பிறகு மீண்டும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன.
பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், தி.மு.க எதையுமே செய்யவில்லையே. மதுக்கடையைத்தான் மூடவில்லை, சரி பார்களை மூடவேண்டும் என நீதிமன்றம் சொன்னபோதே மூடியிருக்கலாமே! ஏன் மேல்முறையீடு சென்றது தி.மு.க அரசு? தி.மு.க-வுடைய இன்டென்ஷன் மதுக்கடைகளை மூடக்கூடாது என்பதுதான். அதற்காக் மாற்றி மாற்றிப் பேசிவருகிறார்கள். பத்திரிகையாளர்களிடமோ, கட்சியினரிடமோ கனிமொழி இப்படிப் பேசியிருந்தால் பரவாயில்லை. ஆனால், வளரும் சமுதாயமான மாணவர்கள் மத்தியிலும்கூட தி.மு.க-வினரால் உண்மையைப் பேசமுடியவில்லை!” என்றார்.
இதற்கிடையே, ஏப்ரல் 26-ம் தேதி சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அ.தி.மு.க சார்பில் பேசிய முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான் தங்கமணி, ’மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் படிப்படியாக 1000 மதுக்கடைகளை மூடியது மட்டுமின்றி, கால நேரத்தையும் குறைத்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது பூரண மதுவிலக்குக் குறித்துப் பேசியது தி.மு.க. தற்போது புதிய கடைகளும், பார்களும் திறக்கப்பட்டுவருவதாகச் சொல்கிறார்கள். மதுவிலக்கு விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “2021 திமுக தேர்தல் அறிக்கையில் எங்குமே பூரண மதுவிலக்குக் குறித்துத் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் 5350 டாஸ்மாக் கடைகள் உள்ளன. புதிய கடைகள் எங்கும் திறக்கப்படவில்லை. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மூடப்படும் கடைகள் தான் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறது” என்றார்.
கனிமொழியைத் தொடர்ந்து, துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும்கூட பூரண மதுவிலக்குப் பற்றி தி.மு.க சொல்லவே இல்லை என்கிறார். இதன் உண்மைத்தன்மை அறிய தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை ஆராய்ந்தோம், உள்ளபடியே அதில் பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையே இல்லை.
தி.மு.க தரப்பில் இதுபற்றிக் கருத்துக் கேட்பதற்கு சிலரைத் தொடர்புகொண்டோம், வெளிப்படையாகப் பேச முன்வரவில்லை. பெயர் வேண்டாம் என்ற கோரிக்கையோடு ஒரு மாநில நிர்வாகி பேசினார். “கனிமொழி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னதுபோல தி.மு.க தேர்தல் அறிக்கையில், பூரண மதுவிலக்கு என்கிற வார்த்தையே இல்லை. எனினும், முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் மதுவிலக்குக் குறித்துப் பேசினார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்குக் குறித்து வாக்குறுதிக் கொடுத்திருந்தோம். அ.தி.மு.க-வோ படிப்படியாக அமலப்டுத்துவோம், முதலில் 500 கடைகளை மூடுவோம் என்று மட்டுமே சொன்னது. ஜெயித்தது என்னவோ அ.தி.மு.க-தான்!
அதன் பின்னர் 2021 தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு பற்றி குறிப்பிடவே இல்லை. தமிழகம் இன்றிருக்கும் கடன்சுமையில், டாஸ்மாக் வருமானம்தான் ஓரளவுக்கு அரசுக்குத் தெம்பைக் கொடுத்துவருகிறது. இருந்தபோதும், மதுவினால் ஏற்படும் தீமைகளை முதல்வர் உணர்ந்தே இருக்கிறார். அதனால், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை, மேற்கொண்டு மதுக்கடைகளைத் திறக்கும் எண்ணமில்லை, படிப்படியாக ஐந்தாண்டுகளில் மதுக்கடைகளை மூடுவதற்கு முதல்வர் முன்னெடுப்பை எடுப்பார் என்றே தெரிகிறது” என்றனர்.