தன் கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக பொய்ப் புகார் அளித்த மனைவிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜை சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் முகமது சல்மானுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருமணத்திற்கு முன்பு தாங்கள் இருவரும் காதலித்து வந்த போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி சல்மான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். காவல்துறையினர் மனைவி புகாரை ஏற்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த நிலையில், புகாரை கணவர் முகமது சல்மான் முற்றிலுமாக மறுத்தார். இதனால் இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வரை சென்றது.
நீதிமன்றத்தில் விளக்கமளித்த மனைவி திருமணம் செய்து கொள்வதாக கூறி முகமது சல்மான் தன்னுடன் உடல் ரீதியிலான உறவில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். முதலில், மனைவி சம்மதிக்க மறுத்தபோதிலும், சல்மான் பேச்சைக் கேட்டு ஒப்புக்கொண்டார. சில நாட்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு, மனைவி கணவன் மீது இந்த புகாரை அளித்துள்ளார். கணவர் தரப்பில் சிலர் தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கி வருவதாகவும், அந்த தாக்கத்தில் தான் மனைவி தன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ததாகவும் கூறினார்.
இந்நிலையில் மனைவி திடீரென எஃப்ஐஆரை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். திருமணத்திற்கு முன்பு சல்மானுக்கும் தனக்கும் இடையே எந்தவிதமான உடல் ரீதியான உறவும் இல்லை என்றும், தான் அவரை மட்டுமே காதலிப்பதாகவும் கூறினார். இதையடுத்து கணவன் மீது மனைவி சுமத்திய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும் கணவர் மீதான எப்ஐஆரை ரத்து செய்து, மனைவிக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.
நீதிபதி அஞ்சனி குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. தனது கணவர் மீது போலி எப்ஐஆர் பதிவு செய்த பெண்ணுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது. உண்மையான வழக்குகள் பின்னுக்குத் தள்ளப்படுவதால், சட்ட மற்றும் நீதித்துறை அமைப்புகளின் மதிப்புமிக்க நேரத்தை இதுபோன்ற தவறான கோரிக்கைகளுக்காக தவறாகப் பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM