கேந்திர வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளை நீக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆண்டுதோறும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை சுமார் 10 மாணவர்கள் வரை இட ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இருந்தது. மத்திய அரசுப் பள்ளிகளில் சேர ஏராளமான கோரிக்கைகள் வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்ற பிரச்னை எழுந்தது. இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என எம்.பி.க்களிடையே விவாதம் ஏற்பட்டது.
இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் அல்லது உறுப்பினர்கள் பரிந்துரைகளின் அடிப்படையில் சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், கேந்திர வித்யாலயா மாணவர் சேர்க்கைக்கான நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்துசெய்து, திருத்தப்பட்ட சேர்க்கை வழிகாட்டுதல்களை திங்கள்கிழமை வெளியிட்டது.
அதில் எம்.பி ஒதுக்கீடு மட்டுமல்லாமல் கல்வி அமைச்சக ஊழியர்களின் 100 குழந்தைகள், எம்.பிக்கள் மற்றும் ஓய்வுபெற்ற கேந்திர வித்யாலயா ஊழியர்களின் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரின் விருப்ப ஒதுக்கீடு உள்ளிட்ட பிற இடஒதுக்கீடுகளையும் நீக்கி, அவற்றுக்கு பதில் சில புதிய ஒதுக்கீடுகளும் சேர்க்கப்பட்டன.
புதிய இட ஒதுக்கீட்டின் கீழ் 50 ஒதுக்கீடுகள் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பி மற்றும் சி பிரிவுகளைச் சேர்ந்த மத்திய காவல் அமைப்புகளான சி. ஆர். பி. எஃப், பி.எஸ்.எஃப், எஸ்.எஸ்.பி, என்.டி.ஆர். எஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸில் பணிபுரிபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர PM CARES திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகளும், இந்தப் புதிய திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.