”எப்போதும் மக்களோடு இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் பயணிக்கிறேன்” என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தவர், ”தேர் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தது தாங்க முடியாத மிகப்பெரிய துயரம். இதைக்கேட்டு துடி துடித்துப் போனேன். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். தஞ்சை மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர் பழனி மாணிக்கம், சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், நீலமேகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோரை உடனடியாக நேரில் சென்று மீட்பு மற்றும் அனுப்பிவைத்தேன்.
நான் தஞ்சை மண்ணின் மைந்தனாக இத்துயரத்தில் பங்கேற்கிறேன். தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசின் சார்பில் தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கியுள்ளேன். இதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் தலா ரூ.25,000 தி.மு.க சார்பில் வழங்கியுள்ளேன். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவும், இது போன்ற விபத்துகள் வருங்காலத்தில் ஏற்படாத வகையில் வழிக்காட்டு நெறிமுறைகள் உருவாக்கவும், குமார் ஜெந்த் ஐஏஎஸ்ஸை ஒரு நபர் குழுவாக அமைத்து உத்தரவிட்டுள்ளேன்.
இது போன்ற விபத்துக்களில் யாரும் அரசியல் பார்க்கக்கூடாது. போற்றுபவர்கள் போற்றட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும் என்ற எண்ணத்தில், எப்போதும் மக்களோடு இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் நான் தொடர்ந்து பயணிக்கிறேன்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM