சென்னை கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (48). இவர் சென்னை மாதவரம் 200 அடி சாலையில் பெயின்ட் விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு தனிப்பட்ட செயலாளர் வேலைக்கு ஆள் தேவை என கணேஷ்பாபு விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்த கலா (பெயர் மாற்றம்) என்ற பெண், 22.4.2022-ம் தேதி காலை 11.30 மணியளவில் இன்டர்வியூவுக்குச் சென்றார். அவரிடம் கணேஷ்பாபு, இன்டர்வியூ நடத்தினார். அப்போது ஆபாசமாக பேசியதாகவும், ஆபாச செயலுக்கு கட்டாயப்படுத்தி ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தாகவும் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக கலா, மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் கணேஷ்பாபுவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கணேஷ் பாபுவை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “நேர்காணலுக்கு வந்திருந்த கலாவிடம் அவரது ஆடைகள், அலங்காரங்கள் குறித்து கணேஷ்பாபு விமர்சித்துள்ளார். பிறகு எனது நிறுவனத்தில் தனிப்பட்ட செயலாளர் வேலைக்குச் சேர்ந்தால் மாதத்தில் மூன்று தடவை வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும். அப்போது தன்னுடன் ஒரே அறையில் தங்க நேரிடும் என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்தால் உனது சம்பளம், வாழ்க்கை தரத்தை உயர்த்தி தருகிறேன் என்று கூறிய கணேஷ்பாபு, நல்ல உடையாக வாங்கிக் கொள் என்று கலாவிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் அதை கலா வாங்காமல் அங்கிருந்து வெளியில் வந்துள்ளார். கலா அளித்த புகார் அடிப்படையில் கணேஷ்பாபுவை கைது செய்துள்ளோம்” என்றனர்.