47 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கருணாநிதிக்கு மீண்டும் சிலை: ஒரு பிளாஷ்பேக்

திமுகவின் மறைந்த முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதியின் ஆளுயர வெண்கல சிலை சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால அதாவது ஒரு 47 ஆண்டு கால வரலாற்றை பின்னோக்கி பார்க்க வைக்கிறது.

இதே சென்னை அண்ணாசாலையில் 1984-ம் ஆண்டு வரை கலைஞர் கருணாநிதியின் ஆளுயர சிலை இருந்தது. கலைஞர் வாழ்நாளிலேயே அவருக்கு சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை ஒரு பதற்றமான துயரமான நாளில் இடிக்கப்பட்டது. அதற்கு பிறகு, கலைஞர் கருணாநிதி தனக்கு சிலை வைக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. சென்னையில் கலைஞர் கருணாநிதியின் முதல் சிலை வைக்கப்பட்டதும் அந்த சிலை இடிக்கப்பட்ட சூழல் குறித்து ஒரு பிளாஷ் பேக் பார்ப்போம்.

சென்னையில் இன்றைக்கு உள்ள தலைவர்களின் பெயரில் அமைந்த பல்வேறு சாலைகளில், தலைவர்களின் சிலைகளில் பாதிக்கும் மேல், கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் பெயர் வைக்கப்பட்ட சாலைகளாக இருக்கும். கலைஞர் கருணாநிதி திறந்து வைத்த சிலைகளாக இருக்கும். அவருக்கு சிலை வைப்பதற்கான பேச்சு எப்போது தொடங்கியது என்றால், அது அண்ணா காலத்திலேயே தொடங்கிவிட்டது என்கிறார்கள் திமுகவினர்.

கலைஞர் கருணாநிதி தனது பேச்சாற்றலாலும் தனது எழுத்தாற்றலாலும் தமிழகத்தில் தென்னகத்தின் முக்கிய அரசியல் தலைவராக பரிணாமம் அடைந்தவர். தனக்கென்று ஒரு தனி ஆதரவாளர்களை ஈர்த்தவர். அவர்கள் ரசிகர்கள் அல்ல. கலைஞரின் எழுத்தின் மீதும் அவருடைய பேச்சின் மீதும் எற்பட்ட ஈர்ப்பால் திரண்டவர்கள்.

திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா தலைமையில் பிரிந்து சென்ற பெரியாரின் தளபதிகள், அண்ணாவின் தம்பிகள் 1949 ஆண்டு திமுகவைத் தொடங்கினார்கள். திமுக தொடங்கப்பட்ட 18 ஆண்டுகளில் பேரறிஞர் அண்ணா தலைமையில் 1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்தது. 1968 இல் அண்ணா மறைவுக்கு பிறகு, கலைஞர் கருணாநிதி திமுகவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் முதலமைச்சரானார். கலைஞர் கருணாந்தி 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். தனது 94வது வயதில் காலமானார்.

தமிழகத்தை அரை நூற்றாண்டுக்கு மேலாக திமுகவும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவும்தான் ஆட்சி செய்து வருகிறது. இந்த இரு கட்சிகளைத் தாண்டி எந்த தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் பெரிய எழுச்சி அடைய முடியவில்லை. அந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்து வருகின்றன

தற்போது கலைஞர் கருணாநிதியின் மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக முக்கால் நூற்றாண்டை நெறுங்குகிறது. இந்த சூழலில்தான் கலைஞர் சிலை இடிக்கப்பட்ட அதே சென்னையில் அவருக்கு சிலை வைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, கலைஞர் கருணாநிதிக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் 1971 ஆம் ஆண்டு விருப்பம் தெரிவித்தார். ஆனால், கலைஞர் கருணாநிதி அதற்கு மறுப்பு தெரிவித்தார். முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதற்கான பாராட்டு விழா சென்னை வேப்பேரியில் பெரியார் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில், கருணாநிதிக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் தனது விருப்பத்தை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த குன்றக்குடி அடிகளார் இதைக் கேட்டு அப்போதே அதே மேடையிலேயே கருணாநிதி சிலை அமைக்க ரூ1,000 நன்கொடை கொடுத்தார் என்பதை இப்போது திராவிட இயக்கத்தினர் நினைவுகூர்கின்றனர்.

ஆனால், கலைஞர் கருணாநிதி தனக்கு சிலை அமைப்பதை விரும்பவில்லை. அனைவரும் வற்புறுத்தியபோது, கருணாநிதி , தந்தை பெரியாருக்கு சிலை வைத்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று கூறினார். அதன் அடிப்படையில், தற்போது சென்னையில் அண்ணா சாலையில், சிம்சனில் தந்தை பெரியாரின் கம்பீர சிலை அபோது நிறுவப்பட்டது.

பெரியார் சிலை வைக்கப்பட்ட பின்னர், 1975 ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் மணியம்மையார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் சிலை பேரறிஞர் அண்ணாவைப் போல கையை உயர்த்தி பேசுவது போல அமைக்கப்பட்டது. இந்த சிலை 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி எம்.ஜி.ஆர். மறைந்த நாளில் அவரது ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் சிலையில் நெஞ்சுப் பகுதியில் ஒருவர் கடப்பாரை கொண்டு இடித்து சேதப்படுத்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அப்போது, நாளிதழ்களில் வெளியானது. இந்தப் படத்தை முரசொலியில் பிரசுரித்த கலைஞர் கருணாநிதி, உடன்பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை நெஞ்சிலேதான் குத்துகிறான்; அதனால் நிம்மதி எனக்கு! வாழ்க! வாழ்க!!” கவிதை எழுதினார்.

அதற்கு பிறகு, கலைஞர் கருணாநிதி தனது வாழ்நாளில், அவருக்கு சிலை அமைப்பதற்கு பலர் விருப்பம் தெரிவித்தாலும் அதை தவிர்த்தார். அவருடைய மறைவுக்கு பிறகு, அவருடைய மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில், சென்னை அண்ணாசாலையில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு இடையே ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் கம்பீர சிலை மீண்டும் நிறுவப்பட உள்ளது. சென்னையில், கலைஞர் கருணாநிதியின் சிலை அமைப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு அரைநூற்றாண்டு வரலாறு கொண்டது என்றால் அது மிகையல்ல.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.