Manoj Kumar R
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரெய்லர் பார்வையாளர்கள் மத்தியில் ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது இரண்டு சுதந்திரமான மற்றும் பார்ப்பதற்கு நன்கு படித்த, மாடர்ன் பெண்கள் ஒரு ஆணுக்காக ஒருவருக்கொருவர் சண்டையிடுவதைக் காட்டியது. இது நம்முடைய பெரும்பாலான திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களின் பொதுவான கருப்பொருளாக இருக்கிறது என்றாலும், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ரூத் பிரபு மூவரும், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட ஒரு சிக்கல் நிறைந்த முக்கோணக் காதல் படத்தில் நடிக்கிறார்கள் என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது.
இந்தப் படம் வெறும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று யாரும் சும்மா சொல்லிவிட முடியாது. இது வெறும் நகைச்சுவை படம் என்பது தெரியும். சரி, சந்தானத்திடமிருந்து (உதாரணமாக டிக்கிலோனா) இப்படி ஒரு படம் வருவதை நம்மால் ஜீரணிக்க முடியும். ஆனால், அது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரிடம் இருந்து வந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், திரைக்கு உள்ளேயும் வெளியேயும் கணிசமான அளவில் உணர்வுப் பூர்வமான நுண்ணறிவு உள்ளவர்களாக முற்போக்கான, தாராளவாதக் கருத்துக்களைக் கொண்ட சில முன்னணி நட்சத்திரங்களில் இந்த மூவரும் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சொந்தத் திறனில், திரைப்படங்களிலும் அவர்களின் வாழ்க்கையிலும் சமூகத்தின் பழமைவாத சிந்தனைகளை எதிர்த்ததன் மூலம் தனித்து நிற்கிறார்கள்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, நடிகர் விஷால் தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தில் கஸநோவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரம் எல்லாவற்றிலும் பல தேர்வுகள் வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்று விரும்பும் காதாபாத்திரம். அதனால், அவர் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். அந்தத் தத்துவம் அவருடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் வந்து நிற்கிறது. ஆனாலும், அவர் ஒரு போதும் பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பவில்லை. அவர் தனது துணைவியைத் தேர்ந்தெடுக்க காதல் என்ற பெயரில் பெண்களை ஆடிஷன் செய்யும்போது, அவர் ஏன் எல்லாவற்றிலும் சிறந்ததற்கு மட்டுமே தகுதியானவர் என்று ஒருமுறை கூட யோசிக்கவில்லை? அதற்கு, அவர் பெரும்பாலும் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வு காரணமாக இருக்கலாம்.
12 வருஷமா காத்து வாக்குல ரெண்டு காதல் இருக்கிறது. ட்ரெய்லர் மற்றும் டீசரைப் பார்க்கும்போது, விஜய் சேதுபதியின் காதல் மன்னன் கதாபாத்திரம் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பது போல் தெரிகிறது. மேலும், அவர் தனது கேர்ள் ஃபிரண்ட்ஸ்களிடம் மாட்டிக்கொள்ளும்போது, அவர் இருவரையும் காதலிப்பதாகவும், இருவரையும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஒப்புக்கொள்கிறார். இந்த காதல் மன்னன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் டேட்டிங் செய்வதன் பலன்களையும் சலுகைகளையும் அனுபவிப்பதையும் பார்க்கிறோம். பின்னர், இந்த பெண்கள் தாங்கள் மிகவும் நேசிக்கும் அந்த ஆணின் கவனத்தைப் பெறுவதற்காக ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டிபோடுவதைப் பார்க்கிறோம்.
காதல் மன்னனாக அவர் ஏன் இப்படியான கதாபாத்திரமாக இருக்கிறார் என்பதற்கு படத்தைப் பார்க்கும்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நல்ல விளக்கம் தருவார் என்று நம்பலாம். இந்த இரண்டு அழகான, வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்கள், இந்த ஆளின் திள்ளுமுள்ளு பற்றி கண்டுபிடித்த பிறகும் ஏன் அவருடன் உறவில் இருக்க சண்டைபோட முடிவு செய்கிறார்கள்?
நம்முடைய சினிமா உலகில் நயன்தாராவும் சமந்தாவும் பெண்களின் தீவிர அடையாளமாக இருக்கிறார்கள். ஒரு ஆளின் கவனத்தைப் பெறுவதற்காக ‘டு டுட்டூ டூ’ என்ற பாடலுக்கு போட்டி போட்டுக்கொண்டு நடனமாடுவதைப் பார்ப்பது மோசமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய நவீன பெண்களின் லட்சியங்களையும் விருப்பங்களையும் இந்தப் படம் பிரதிபலிக்கிறதா? அல்லது ஒரு பெண்ணின் தேவையற்ற எதிர்பார்ப்புகளை உறுதியாக வைத்திருப்பது ஒரு ஆணின் கொடுங் கனவு என்று கூறுகிறதா? அல்லது விக்னேஷ் சிவன் இந்த முக்கோணக் காதலைக் காட்டி நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக முற்றிலும் புத்திசாலித்தனமான ஒன்றைக் கொண்டு வந்துள்ளாரா? என்று தெரியவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”