வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்குமாறு மாநிலங்களிடம் மத்திய மின் துறை அமைச்சர் ஆ.கே.சிங் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த டிசம்பரில் மிக அவசியம் என்றால் மட்டும் நிலக்கரியை இறக்குமதி செய்யுங்கள் என கூறியிருந்த நிலையில் தற்போது தட்டுப்பாட்டை சமாளிக்க இறக்குமதியை அதிகரிக்கக் கூறியுள்ளனர்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோராக உள்ளது. அதன் மின் தேவை ஆண்டுக்கு 4.7 சதவீதம் உயர்கிறது. மேலும் நிலக்கரி இறக்குமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. காரணம் இந்தியாவின் மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியை நம்பி உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு நீண்ட கால நோக்கில் நிலக்கரி இறக்குமதியை குறைக்கும் கொள்கையை வகுத்தது. ஆனால் தற்போது உயர்ந்து வரும் வெப்பநிலை மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளின் அதிகரிப்பு ஆகியவற்றால் மின் தேவை உயர்ந்துள்ளது. நிலக்கரி இருப்பு 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது.
கடந்த டிசம்பரில் மத்திய அரசு அத்திவாசிய தேவை ஏற்பட்டால் மட்டும் நிலக்கரியை இறக்குமதி செய்யுங்கள் என்றது. மார்ச் மாதம் அரசு வெளியிட்ட அறிக்கையில் பெரியளவிலான சீர்திருத்தங்கள் காரணமாக மின் தேவை அதிகரித்த போதிலும் இறக்குமதியை கணிசமாக குறைத்ததாக கூறியிருந்தது. 2021 ஏப்ரல் மற்றும் டிசம்பர் காலக்கட்டத்தில் இந்தியா 160.84 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.8% குறைவு.
இந்நிலையில் மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், 2025 வரை நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்குமாறு மாநிலங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தட்டுப்பாட்டை சமாளிக்க தற்காலிக நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கோல் இந்தியா தவிர, தனியார் துறை குறிப்பிடத்தக்க உற்பத்தியை வழங்க 2025 வரை எடுக்கும் என்கின்றனர். மேலும் நிலக்கரியை அனுப்புவதற்கு ரயில் பெட்டிகள் பற்றாக்குறையும் உள்ளது. எனவே மாநில அரசுகள் நிலக்கரி விநியோகத்தை நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து சவால்களை சமாளிக்க ரயில் பெட்டிகளை வாங்கவும் கூறியுள்ளார்.
Advertisement