2016-ம் ஆண்டு `MS804′ என்ற எகிப்து ஏர் விமானம் 37,000 அடி (11,000 மீட்டர்) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கிரேக்கத் தீவான கார்பத்தோஸில் இருந்து சுமார் 130 கடல் மைல் தொலைவில் அந்த விமானம் காணாமல் போனது. அதைத் தொடர்ந்து, தேடுதல் நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு விமானத்தின் கருப்பு பெட்டி கிரீஸ் அருகே கடலில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, விமானம் பயங்கரவாதத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதாக எகிப்தில் அதிகாரிகள் அப்போது கூறியிருந்தனர். ஆனால் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே, விமானம் காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.
இந்த நிலையில், `விமான விபத்து ஏற்படக் காரணம் விமானத்தின் விமானி அவரது அறையில் சிகரெட் பற்றவைத்துள்ளார். அந்த நெருப்பின் காரணமாக அவசரக் கால முகமூடியிலிருந்த ஆக்ஸிஜன் கசிந்து எரிந்து விபத்து நிகழ்ந்திருக்கிறது’ என பிரெஞ்சு விமானப் போக்குவரத்து நிபுணர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த விபத்தில் இறந்தவர்களில் 40 எகிப்தியர்களும், 15 பிரெஞ்சு மக்களும் அடங்குவர். மேலும், விமானத்தில் ஈராக், அல்ஜீரியா, பெல்ஜியம், பிரிட்டன், சாட், போர்த்துகல், சவுதி அரேபியா, சூடான ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் இருந்திருக்கின்றனர்.