உலகையே உலுக்கி வரும் மர்மமான ஹெபடைடிஸ் நோய் பாதிப்புகள் தற்போது ஜப்பான் மற்றும் கனடாவில் சிறார்களில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கனடா பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பாதிப்பு தொடர்பில் உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, 16 வயதுக்கு உட்பட்ட ஒருவர் தொடர்புடைய பாதிப்பு காரணமாக மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகமும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், பாதிப்புக்கு உள்ளானவரின் வயது, பாலினம் மற்றும் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தொடர்பான தகவல் எதையும் வெளியிட மறுத்துள்ளனர்.
மேலும், உலக நாடுகளை தற்போது உலுக்கிவரும் மர்ம ஹெபடைடிஸ் நோய் பாதிப்பு என்பதை மட்டும் உறுதி செய்துள்ளனர்.
சிறார்களை தாக்கிவரும் தொடர்புடைய நோயானது இதுவரை பிரித்தானியா, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் 14 நாடுகளில் சுமார் 200 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார், 17 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டுள்ள மர்ம நோயா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாக கனடா பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், கனடாவில் எத்தனை சிறார்கள் ஹெபடைடிஸ் நோய் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர் என்பதை அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.
குறித்த மர்ம நோயானது கடந்த மார்ச் மாத இறுதியில் ஸ்கொட்லாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது,
மேலும் பிரித்தானியாவில் 114 முறையும், அமெரிக்காவில் குறைந்தது 11 முறையும் கண்டறியப்பட்டது.
ஆனால், இதன் தோற்றம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் எதுவும் இல்லை என்றே நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பான தேசிய ஊரடங்கு நடவடிக்கைகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தியிருக்கலாம் எனவும் அதனாலையே அவர்கள் வைரஸ் பாதிப்புக்கு இலக்காகியிருக்கலாம் எனவும், அல்லது கொரோனா தொற்றின் பிறழ்ந்த பதிப்பாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.