புதுடில்லி,-”கொரோனா பரவல் காலத்தில், ௧௫௦க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை அனுப்பியது,” என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
பசிபிக் கடல் தீவு நாடான பிஜியில், ‘சத்ய சாய் பவுண்டேஷன்’ அமைப்பு சார்பில், குழந்தைகளுக்கான இதய நோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று திறந்து வைத்து பேசியதாவது:பிஜி நாட்டுடன் இந்தியாவுக்கு எப்போதும் நல்லுறவு உள்ளது. உலகத்தை ஒரு குடும்பமாக பார்ப்பது பாரதத்தின் பண்பு, கலாசாரம். இந்தியா தன் குடிமக்களைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், உலக நலன் மீதும் அக்கறை கொண்டுள்ளது.
இதனால் தான், கொரோனா பரவல் காலத்தில், ௧௫௦க்கும் அதிகமான நாடுகளுக்கு, இந்தியா கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அனுப்பியது. இந்தியா – பிஜி நடுவே பெருங்கடல் இருந்தாலும், இரு நாட்டையும் கலாசாரம் இணைத்துள்ளது. இதற்கு அடையாளமாகவே, சத்ய சாய் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
இதில், குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சைஅளிக்கப்படும். சத்ய சாய்பாபாவுக்கு, உலகெங்கும் பக்தர்கள் உள்ளனர். மக்களிடம் ஆன்மிக உணர்வையும், சேவைப் பண்பையும் ஏற்படுத்தியவர் சத்ய சாய்பாபா.சத்ய சாய்பாபாவின் பக்தர்கள், இப்போதும், கல்வி, மருத்துவம், ஏழைகளின் நலன் உட்பட, பல துறைகளில் சேவை செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர்பேசினார்.
Advertisement