சென்னை: தஞ்சாவூர் அருகே நடந்த தேர் விபத்தில் உயிரிழந்தோருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடிமற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் அருகே நடந்த தேர் திருவிழாவில், மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்தது மிகவும் சோகமான சம்பவம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
பிரதமர் மோடி: தஞ்சாவூர் அருகே நடந்த தேர் விபத்து சம்பவத்தால் மிகுந்த வேதனைஅடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: இந்தவிபத்து செய்தி கேட்டு மிகுந்தஅதிர்ச்சி அடைந்தேன். இவ்விபத்தில் மரணமடைந்தோரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும்சுற்றத்தாருக்கு எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைய தமிழக மக்களோடு இணைந்து பிரார்த்திக்கிறேன்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: இச்செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனதுஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ: இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மதிமுக சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும்அடைந்தேன் இவ்விபத்தில் காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்த விபத்து, அதனால் ஏற்பட்டஇழப்புகள் குறித்து நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சோகம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.
தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த்: தஞ்சாவூர் தேர்திருவிழா விபத்தில் 11 பேர் உயிர்இழந்தனர் என்ற செய்தி கேட்டுமிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இவ்விபத்தில் 11 பேர்உயிரிழந்திருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: இந்த கோர விபத்து அதிர்ச்சி தருகிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கட்சியின் மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் இரா.முத்தரசன்: இந்தவிபத்து பெரும் வேதனையளிக்கிறது. இந்தச் சம்பவத்தில் உயிர்இழந்த அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: இது நெஞ்சை உறைய வைக்கும் கொடூரமாக உள்ளது. இவ்விபத்தில் சிக்கி உயிர்இழந்தோரின் குடும்பத்தினர் யாவருக்கும் விசிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.