இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா பரவல் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாகப் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலை குறித்தும் குறிப்பிட்டார். அப்போது அவர், “மத்திய அரசு, கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்க கோரிக்கை வைத்தோம். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. அதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே உடனடியாக வாட் வரியைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பிரதமர் மோடி கலால் வரி குறைக்காத மாநிலங்கள் எனச் சுட்டிக்காட்டிய மாநிலங்கள் தொடர்ந்து பதிலளித்து வருகின்றன. அதைத் தொடர்ந்து, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பிரதமரின் பேச்சுக்குப் பதிலளிக்கும் விதமாக, “தமிழக அரசு பெட்ரோல் மீது ரூ, 22.54, டீசல் மீது ரூ, 18.45 என வாட் வரி விதித்துள்ளது. இந்த வாட் வரி 2014-ல் பெட்ரோல் மீது ரூ,15.67, டீசல் மீது ரூ, 10.25 என வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலின் மீது விதித்துவந்த கலால் வரி ரூ 32.90 லிருந்து ரூ,5 குறைத்து தற்போது ரூ, 27.90 வசூலிக்கிறது. அதே போல டீசல் மீதான கலால் வரியில் ரூ,10 குறைத்து ரூ, 21.80 வசூலிக்கிறது.
ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு பெட்ரோல் மீது ரூ.9.48 எனவும் டீசல் மீது ரூ. 3.57 மட்டுமே கலால் வரியாக மத்திய அரசு வசூலித்து வந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீது கலால் வரி சுமார் 200 சதவிகிதமும் டீசல் மீது சுமார் 500 சதவிகிதமும் உயர்த்தியுள்ளது. எனவே மத்திய அரசு மீண்டும் 2014-ல் இருந்த அதே கலால் வரியையே மாண்புமிகு பிரதமர் மோடி மீண்டும் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.