எடப்பாடியை விசாரிக்க அடம்பிடித்த புகழேந்தி முதல் தமிழிசைக்கு அமித் ஷா அட்வைஸ் வரை… கழுகார் அப்டேட்ஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அப்போலோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணையை நிறைவு செய்திருந்த ஆணையம், அத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

ஆனால், அ.தி.மு.க-விலிருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தியோ, “ஜெயலலிதா மரணம் தொடர்பாக பன்னீர் உட்பட பலரையும் விசாரித்த ஆணையம், எடப்பாடியை மட்டும் ஏன் விசாரிக்கவில்லை? அவரை விசாரிக்காமல் ஆணையத்தின் விசாரணை நிறைவடையக் கூடாது” என்று ஏப்ரல் 26 அன்று ஆணையத்தில் ஆஜராகி கோரிக்கை வைத்தார். ஆனால் அவரின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே விசாரணையை நிறைவு செய்திருக்கிறது ஆணையம். இதற்கிடையே புகழேந்தி தரப்பு எடப்பாடியையும் விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடவிருக்கிறதாம். ஆணையம் தரப்பில் தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன!

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு வந்தார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுக் கிளம்பியவர், தன் அருகிலிருந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம், “என்னுடன் ஹெலிகாப்டரில் வாருங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

சென்னை வரும் வரை தமிழிசை செளந்தராஜனிடம் பேசிய அமித் ஷா, “தமிழக பா.ஜ.க-வினர் இடையே என்ன நடக்கிறது… உட்கட்சிப் பஞ்சாயத்துகள் என்னென்ன?” என்றெல்லாம் விசாரித்தவர், “தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சேர்த்து 100 இளைஞர்களைத் தலைவர்களாக உருவாக்குங்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாம்தான் ஆட்சி செய்வோம்” என்று உத்வேகம் ஊட்டினாராம்! இதைக் கேள்விப்பட்ட பா.ஜ.க நிர்வாகிகளோ, “ஒரு தலைவரை வெச்சுக்கிட்டே நாங்க படாதபாடு படுறோம்… நூறு தலைவர்களுக்கெல்லாம் தாங்குமா தமிழக பா.ஜ.க!” என்று புலம்புகிறார்கள்!

தமிழக சட்டசபையில் மே 10 அன்று மானியக் கோரிக்கை கூட்டத்தொடர் முடிந்த பிறகு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் இருக்கும் என்கிறது கோட்டை பட்சி. பல அமைச்சர்களுக்கு அவர்களின் துறை சார்ந்த செயலாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாலேயே இப்படியொரு முடிவு என்கிறார்கள். “இரண்டு அமைச்சர்களின் துறையை கவனிக்கும் வட இந்திய ஐ.ஏ.எஸ் ஒருவர், பல கோப்புகளை பெண்டிங் வைப்பதாகத் தொடர் புகார்கள் எழுவதால், அவரை மாற்றத் தீர்மானித்திருக்கிறார்கள். அவரை மட்டும் மாற்றினால் தேவையில்லாத சர்ச்சை எழும் என்பதற்காக, அமைச்சர்களின் விருப்பமறிந்து துறைச் செயலாளர் மாற்றத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது ஆட்சி மேலிடம்” என்கிறது சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரம்.

உச்சகட்ட குழப்பத்தில் தவிக்கிறது கோவை மாநகராட்சி நிர்வாகம். மேயர் கல்பனா ஒருபக்கமும், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஒருபக்கமும், மண்டலத் தலைவர்கள் ஒருபக்கமும் ஓடுவதால், யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள் அதிகாரிகள். ஏற்கெனவே மேயர் கல்பனா, அமைச்சர் செந்தில் பாலாஜியால் அடையாளம் காட்டப்பட்டவர் என்பதால், மற்றோர் அமைச்சரின் மறைமுக உத்தரவின் பேரில் அதிகாரிகள் அவரைப் புறக்கணிக்கப்பதாகச் சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த மண்டலத் தலைவர்கள் கூட்டத்துக்கும் மேயருக்கு அழைப்பு விடப்படவில்லை.

கோவை மேயர் கல்பனா

இது பற்றி மேயர் தரப்பிலிருந்து மண்டலத் தலைவர்கள் சிலரை அழைத்துக் கேட்டதற்கு, ‘மண்டலத் தலைவர்கள் கூட்டங்களுக்கு மேயரை அழைக்கவேண்டிய அவசியம் இல்லை’ என்று முகத்தில் அடித்ததுபோல பதில் வந்ததாம். இன்னொரு பக்கம், துணை மேயருக்கு மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே தனி அலுவலகம் இருந்தும் அவர் அங்கு வருவதில்லை; தனது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தெற்கு மண்டல அலுவலகத்திலேயே டேரா போடுகிறார் என்று புகார் எழுந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகவே கோவை மாநகராட்சி நிர்வாகம் ஊழலால் சீரழிந்த நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகாவது நிர்வாகம் சீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் ஆளுக்கொரு பக்கம் அரசியல் செய்வதால், கோவை மாநகருக்கு விடிவுகாலமே பிறக்காதா என்று புலம்புகிறார்கள் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூரில் இருக்கும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், சமீபத்தில் மொத்தம் 26,000 நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு சென்று இறக்கியிருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு அவற்றில் 19,000 நெல் மூட்டைகளை அதிகாரிகள் எந்த கமிஷனும் வாங்காமல் கொள்முதல் செய்ததைக் கண்டு அதிசயத்திலும் ஆச்சர்யத்திலும் பூரித்துப்போனார்கள் விவசாயிகள். அவர்களின் மகிழ்ச்சி இரண்டு நாள்கள்கூட நீடிக்கவில்லை… அந்த ஏரியாவின் ஆளுங்கட்சிக் கிளைப் பிரமுகரான மன்னர் பெயர்கொண்டவர், “மாவட்டம் முழுசும் எல்லா இடங்கள்லயும் கமிஷன் கொடுத்துத்தான் கொள்முதல் நடக்குது… இங்கே வாங்காமவிட்டா எனக்கு என்ன மரியாதை” என்று டயலாக் பேசியவர், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட 19,000 மூட்டைகளுக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால்தான், மீதமுள்ள ஏழாயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியும்” என்று அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, “முதலில் ஏன் கமிஷன் வாங்கவில்லை?” என்று விசாரித்தால், “லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வருகிறது என்று யாரோ கொளுத்திபோட்டிருக்கிறார்கள்… அதனால்தான் 19,000 மூட்டைகளுக்கு கமிஷன் வாங்கவில்லை” என்று காதைக் கடிக்கிறார்கள் அதிகாரிகள்!

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அங்கமங்கலம் கிராமத்தில் நடந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜனகர் வரவேற்றுப் பேசியதுதான் வில்லங்கமாகியிருக்கிறது.

அனிதா ராதாகிருஷ்ணன்

ஒன்றியத் தலைவர் பேசியதை அடுத்து மைக்கைப் பிடித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “வரவேற்புரையில உமரி சங்கரோட பெயரை ஏன் சொல்லலை, யூனியன் சேர்மன்னா கொம்பா முளைச்சிருக்கு?” என்று வறுத்தெடுத்துள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு ஏரியாவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், “அண்ணாச்சியோட வலதுகரமா இருக்கிறவர்தான் உமரி சங்கர். அவர் ஒண்ணும் அரசு அதிகாரி கிடையாது. அதனால வரவேற்புரையில அவரோட பெயரைச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. அதோட அண்ணாச்சியோட பேரு அடிக்கடி பஞ்சர் ஆவதே உமரி சங்கராலதான்… எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டாரா அண்ணாச்சி!” என்று படபடக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

கரூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சமீபத்தில் அந்த ஏரியாவில் நடந்த சாலைப் பணிகளை ஒப்பந்தம் எடுத்த தி.மு.க சார்பு ஒப்பந்ததாரர் ஒருவர், மூன்று கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கவர்னர் அலுவலகத்துக்குப் புகார் அனுப்பினார். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எட்டுப் பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆனால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பவர்ஃபுல் அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர் என்பதால், அவரின் நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லையாம். இந்த நிலையில், ‘ஏற்கெனவே டெண்டர் எடுத்த பணிகளை முடிப்பதற்கு முன்பே, இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை பணம் செட்டில் செய்துவிட்டது’ என்று சிலர் புகார் கொடுத்திருக்கிறார்கள். புகாருக்குள்ளான அந்த இரண்டு ஒப்பந்ததாரர்களும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வேண்டியவர்கள் என்கிறார்கள். தன்னை கார்னர் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பழிவாங்கவே இப்படியொரு செக் வைத்திருக்கிறார் பவர்ஃபுல் அமைச்சர் என்கிறார்கள் இதன் உள் விவரங்களை அறிந்தவர்கள்!

டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் ஏரிகளைத் தூர்வாருவதற்கு தமிழக அரசு 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட்டு, ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை டெண்டர் அறிவிப்பதற்கான அறிகுறிகூட தெரியவில்லை. காவிரியில் போட்ட கல் கணக்காக திட்டம் கிடப்பில் இருக்கிறது. விசாரித்தால், “மேலிட பிரமுகரே 40 பர்சன்ட் கேட்குறாரு. இன்னொரு பக்கம், மக்கள் பிரதிநிதிகளும் பங்கு கேட்குறாங்க. உதாரணத்துக்கு, தஞ்சாவூர் மாவட்டத்துல மட்டும் எட்டு மக்கள் பிரதிநிதிகள் இருக்காங்க… அவங்க மட்டுமில்லாம ஆளுங்கட்சியோட மாவட்டப் பொறுப்பாளர்களும் கமிஷன் எதிர்பார்க்குறாங்க. இப்படி இவங்களுக்கே 50 பர்சன்ட் கமிஷன் போறதால டெண்டர் எடுக்க வர்ற ஒப்பந்ததாரர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்குறாங்க” என்று காதைக் கடிக்கிறார்கள் அரசு அதிகாரிகள்!

கோவை மண்டல வட்டாரப் போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தி என்பவரது காரிலிருந்து 28.35 லட்சம் ரூபாய் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது அல்லவா… இந்த விவகாரத்தில் மேலிடத்தைக் காப்பாற்றும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன என்று முணுமுணுக்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.

போக்குவரத்து இணை ஆணையர் காரில் ரூ. 28.35 லட்சம் பறிமுதல்

உமாசக்தி கோவை மண்டலப் பொறுப்பாளர் என்பதால், அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களின் வசூல் இவர் வழியாகவே துறையின் மேலிடம் வரை செல்லுமாம். இதையடுத்து, இவர் சிக்கினால் அடுத்தடுத்து உயரதிகாரிகள் முதல் கரைவேட்டி வி.ஐ.பி-க்கள் வரை சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் வேலைகள் தொடங்கியிருக்கின்றன என்கிறார்கள். அதற்கு ஏற்ப இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை முதலில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் மாமூல் வாங்குகிறார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இரண்டாவதாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பல்வேறு வழிகளில் லஞ்சம் வாங்கிய அடிப்படையில்’ என்று மட்டுமே திருத்தி வெளியிட்டிருந்தார்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.