புதுடெல்லி: பொறுப்பான பதில்களை பிரதமர் மோடி கூற மறுப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மீது ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசானது கடந்த ஆண்டு நவம்பரிலேயே எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்து விட்டது. மாநிலங்கள் வரியை குறைக்குமாறும், பலனை பொதுமக்களுக்கு மாற்றும்படியும் வலியுறுத்தப்பட்டன.ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. இதனால், அந்த மாநில மக்கள் பெட்ரோல், டீசல் விலையுயர்வு சுமைக்கு ஆளாகின்றனர். மாநிலங்களுக்கு நவம்பரில் என்ன வரி குறைக்கப்பட்டதோ அதன் பலனை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில், வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மோடியை கடுமையாக தாக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எரிபொருள் விலையேற்றம் – மாநில அரசுகளே காரணம்; நிலக்கரி பற்றாக்குறை – மாநில அரசுகளே காரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறை – மாநில அரசுகளே காரணம்; மொத்த எரிபொருள் வரிகளில் 68% வரியை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது. எனினும் பொறுப்பான பதில்களை கூற மறுக்கிறார் பிரதமர் மோடி. அவரது கூட்டாட்சி முறை அனைவர்க்கும் சமமானதாக இல்லை. அனைவரையும் வற்புறுத்துகிறது,’என்றார்.