கடந்த ஏப்ரல் 24 அன்று அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த லூக் அய்கின்ஸ் (48), ஆண்டி ஃபாரிங்டன் (39) ஆகிய இரு விமானிகள் இரு விமானங்களில் சுமார் 12,100 அடி உயரத்தில் பறக்கும்போது தங்கள் விமானங்களிலிருந்து வெளியேறி இருவரும் தங்கள் விமானங்களை நடுவானில் மாற்றிக்கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால் இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கட்டுப்பாட்டை இழந்த இரு விமானங்களும் சேதமடைந்த நிலையில் இரு விமானிகளும் பாதுகாப்பாக பாராசூட் மூலம் தரையிறங்கினர்.
இவ்வளவு உயரத்தில் வானத்தில் பறந்துகொண்டே விமானிகள் இருவரும் தாங்கள் பறக்கும் விமானங்களை மாற்றிக் கொள்வது எளிதானதால்ல. ஆனால் முடியாது என்றாலும் நாங்கள் முயன்று பார்ப்போம் என்று களமிறங்கி உள்ளனர் இந்த இரு விமானிகள்.
இதுபற்றிக் கூறிய விமானி லூக் அய்கின்ஸ், “நான் ஆண்டிக்கு (சக விமானி) ஒரு நல்லபடியாக விமானத்தை விட்டுச்சென்றேன் என்று நினைத்தேன். நான் விமானத்திலிருந்து வெளியேறும்போது வேறு என்ன அவருக்கு சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இது போன்று வானத்தில் சாகசம் செய்வது ஒரு போதும் நடக்காது என்று நினைத்தாலும் எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்வோம்.” என்று கூறினார். தற்போது இது தொடர்பானக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.