இந்தி மொழி விவகாரத்தில் பாலிவுட் நடிகர் அஜ்ய தேவ்கனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் அவரை ரியல் சிங்கம் என ஒருபுறம் புகழ்ந்து தள்ளி #SinghamOurRealHero என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்க, மறுபுறம் நமது தமிழ் ரசிகர்கள், “தம்பி.. நீங்க ரீல் சிங்கம் தான். நாங்கதாம்பா ரியல் சிங்கம்” என ட்விட்டரை அதகளப்படுத்தி வருகின்றனர்.
நடிகர் அஜய் தேவ்கனுக்கு இது போதாத காலம் போலவே தெரிகிறது. தேவையில்லாமல் கன்னட நடிகர் சுதீப்பை வம்புக்கு இழுத்து, ‘இந்தி தான் நமது தேசிய மொழி’ என அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. “இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்றே இல்லாத போது இந்தி எப்படி தேசிய மொழி ஆகும்” என நெட்டீசன்கள் அவரை மரண பங்கம் செய்து வருகின்றனர். நெட்டீசன்கள் கொடுத்த டார்ச்சரை தாங்க முடியாத தேவ்கன், “அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்” எனக் கூறும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். இதனால் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது போல தெரிந்தது. ஆனால், அஜய் தேவ்கன் விட்டாலும் அவரது ரசிகர்கள் இந்த பிரச்னையை விடுவதாக தெரியவில்லை.
கடந்த சில மணிநேரமாக ட்விட்டரில் அஜய் தேவ்கனுக்கு ஆதரவாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் சில ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று, அஜய் தேவ்கன் போலீஸாக நடித்த ‘சிங்கம்’ பட ஸ்டில்களை போஸ்ட் செய்து, “எங்க ஆளு ரியல் சிங்கம் டா.. மோதி பாக்காதீங்க” என்ற ரேஞ்சுக்கு அநியாயத்துக்கு பில்டப் செய்து வந்தனர்.
இதனால் பொறுமை இழந்த தமிழ் ரசிகர்கள், ட்விட்டரில் அவர்களுக்கு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர். உண்மையில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘சிங்கம்’ திரைப்படம் தான், ஹிந்தியில் அதே பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. அந்த திரைப்படத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இந்நிலையில், ‘ரீ மேக்’ படம் என்று கூட தெரியாமல் அந்த படத்தின் ஸ்டில்களை வைத்து அஜய் தேவ்கனை ‘ரியல்’ சிங்கம் என அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் புகழ்ந்து வந்தனர்.
இதனை பொறுக்க முடியாத தமிழ் ரசிகர்கள், சூர்யாவின் ‘சிங்கம்’ பட ஸ்டில்களை வைத்து, “தம்பி.. நாங்க தான் ரியல் சிங்கம். நீங்க ரீ மேக் செய்யப்பட்ட ரீல் சிங்கம். இது கூட தெரியாமல் போஸ்ட் வேறு செய்கிறீர்களே..” என கலாய்து வருகின்றனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கன்னடா, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி ரசிகர்களும் அஜய் தேவ்கனை கழுவி ஊற்றி வருகிறார்கள்.
அதில் தெலுங்கு ரசிகர் ஒருவர் செய்துள்ள ட்வீட்டில், “நடிகருக்கோ தேசிய மொழிக்கும், ஆட்சி மொழிக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது ரசிகர்களுக்கோ ஒரிஜினல் படத்துக்கும், ரீ மேக் படத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன ஒரு ஒற்றுமை!” எனக் கூறியிருக்கிறார்.