திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது28). இவர் விஜயவாடாவில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். பேக்கரி உரிமையாளர் வீட்டிற்கு சங்கர் அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அப்போது பேக்கரி உரிமையாளர் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே சென்று விடுவதும் பின்னர் கடை உரிமையாளர் சமரசம் பேசி அழைத்து வருவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கர் பேக்கரி உரிமையாளர் மனைவியை திருப்பதிக்கு அழைத்து வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
அங்கு இளம்பெண் தனியாக இருந்த நேரத்தில் போலீஸ் அவசர எண்100க்கு போன் செய்து சங்கர் தன்னை கடத்தி வந்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் போலீசிடம் தனது கணவர் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.
போலீசார் இளம்பெண்ணின் கணவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். நேற்று மாலை திருப்பதிக்கு வந்த இளம் பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சங்கரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இளம்பெண்ணை மீட்டு சென்றனர்.
தன்னை ஜெயிலில் அடைத்து விடுவார்களோ என்று அச்சமடைந்த சங்கர் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பின் 3வது மாடிக்குச் சென்றார்.
அங்கிருந்து திடீரென கீழே குதித்தார். இதில் சங்கரின் கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தார். இதனை கண்ட போலீசார் சங்கரை மீட்டு திருப்பதி அஸ்வினி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சங்கர் போலீசாரிடம் கூறுகையில்:
பேக்கரி மனைவி ஏற்கனவே தன்னுடன் 4 முறை வீட்டைவிட்டு வெளியே வந்ததாகவும் தற்போது விருப்பப்பட்டு வந்து விட்டு எதற்காக போலீசாருக்கு போன் செய்தார் என தெரியவில்லை என தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.