சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடக பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ, அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க, தமிழக சட்டசபையில் நாளை நடக்கும் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின் போது, அரசாணை 354 ஐ செயல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்று மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன. பல லட்சம் உயிர்களை காப்பாற்றுபவர்களுக்கு இதை நிச்சயம் செய்ய வேண்டும். மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துள்ள இந்த அரசு அவர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையையும் சேர்த்து நிறைவேற்றுவதே அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.