சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “அரசு எடுத்த அதிதீவிர நடவடிக்கையால் ஒரு உயிர் கூட போகவில்லை. உண்மையில் இதுவே வேறு ஆட்சியாக, வேறு முதல்வராக இருந்திருந்தால் 128 பேர் பலியாகி இருப்பார்கள். முதல்வர் எடுத்த வேகமான நடவடிக்கையில் 128 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சாப்பாடும், தண்ணீரும் கொடுத்தற்கு நன்றி.
டவர் ஒன்று, டவர் 2 எல்லாம் எங்கள் ஆட்சியில் கட்டியது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் உண்மை நிலை தெரிந்து பேச வேண்டும். கட்டிடம் கட்டியது கலைஞர். சுண்ணாம்பு அடித்து திறந்து வைத்ததுதான் நீங்கள். மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை என்று பெயர் வைத்ததும் கலைஞர் தான்.
நீங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். நரம்பியல் கட்டிடம் 10 ஆண்டுகளாகவே சேதம் அடைந்து உள்ளது. நீங்கள் பராமரிப்புப் பணியை முறையாக செய்திருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் கட்டிடத்தை முறையாக பராமரிக்காமல் போனதுதான் இந்த விபத்துக்குக் காரணம்.
முதல்வர் அந்த கட்டிடதை உடனடியாக ஆய்வு செய்து பயன்படுத்த தகுதி அற்றது என்றால் புதிய கட்டிடம் கட்ட மானியக் கோரிக்கை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.