கராச்சி பல்கலைகழகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது ஒரு பெண் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஷாரி பலுச் என்ர அந்தப் பெண் படித்து பட்டம் வாங்கியவரும் கூட.
பாகிஸ்தானின் கராச்சி பல்கலைகழகத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி, சீன மொழியை பயிற்றுவிக்கும் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர். பலியானவர்களில் மூன்று பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அத்துடன் இத்தாக்குதலை அவ்வமைப்பைச் சேர்ந்த ஷாரி பலுச் என்ற பெண் நடத்தியதாகவும்,அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
யார் இந்த ஷாரி பலுச்? 30 வயதான ஷாரி பலுச் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தில் இணைந்திருக்கிறார்.
விலங்கியலில் பட்டம் பெற்றுள்ள ஷாரி பலுச், எம்ஃபில் படித்திருக்கிறார். இவருடைய கணவர் பல் மருத்துவராவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தில் இணைந்த ஷாரி தன்னை தற்கொலைப் படை பிரிவில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
கணவரின் அதிர்ச்சி ட்வீட்: ஷாரியின் கணவர் பஷிர் பலுச் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஷாரி என் உயிரே.. உனது தன்னலமற்ற செயல் என் வாயடைத்துவிட்டது. நான் பெருமை கொள்கின்றேன். குழந்தைகள் தாயை நினைத்து மிகவும் பெருமை கொண்டு வளர்வார்கள். நீ எங்கள் வாழ்வின் முக்கிய அங்கமாக இருப்பாய்” என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்று பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் அவ்வப்போது குண்டுவெடிப்பு , தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.