ஆபரேசன் கஞ்சா 2.0: ஒரு மாதத்தில் மட்டும் 3562 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை:
தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழகம் முழுவதும் 28.03.2021 முதல் ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 நடந்து வருகிறது. கடந்த 31 நாட்களில் 2423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 3562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் 6319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 44.9 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிறப்பு நடவடிக்கையில் பல கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்டவிரோதமாக வாங்கி குவித்த சொத்துக்களையும் முடக்கி நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு நடவடிக்கையில் அதிகபட்சமாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு 963 கிலோ, ரெயில்வே காவல் படை 734 கிலோ, திருவள்ளூர் மாவட்டத்தில் 208 கிலோ, சென்னை மாநகரத்தில் 186 கிலோ, நாகை மாவட்டத்தில் 168 கிலோ, கோவை மாவட்டத்தில் 161 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தடை செய்யப்பட்ட குட்காவைப் பொருத்தவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 டன்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3.6 டன்களும், வேலூர் மாவட்டத்தில் 3.2 டன்களும் கைப்பற்றப்பட்டன.
தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு டிஜிபி கூறி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.