திருச்சி மாவட்டம், பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் நீல மேகம். இவர் காஷ்மீர் பகுதி சி.ஆர்.பி.எப். படை பிரிவில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (வயது 29).
நேறிரவு அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டதனால் காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு கலைவாணி தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தங்க நகை மற்றும் தாலிக்கொடியை பறித்துவிட்டு தப்பி ஓடினான். இதில் கலைவாணியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. கலைவாணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தா. பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் ஜெம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கலைவாணியின் நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.