இன்று சட்டப்பேரவையில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறைகளின் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ சேகர், ஓ.பி.எஸ்-ஐ `ஜல்லிக்கட்டு நாயகர்!’ எனப் புகழ்ந்து பேசினார். அப்போது குறிக்கிட்டப் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், “பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு நாயகர் என அழைக்கின்றனர். அவர் எத்தனை ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டார். அவர் எத்தனை ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியிருக்கிறார்?” என்று கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய ஓ.பி.எஸ், “நான் இளம்வயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியிருக்கிறேன். தி.மு.க, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் காளையை விலங்குகளின் பட்டியலில் சேர்த்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியவில்லை. அ.தி.மு.க.,தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதற்கு காரணமாக இருந்தது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கிடைத்த பிறகுதான் தமிழகத்தில் ஜல்… ஜல் என ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது” என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, “ தி.மு.க, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை வழங்கப்படவில்லை. பீட்டா மற்றும் ப்ளூகிராஸ் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை வாங்கியிருந்தன” என்றார்.