பிரசாந்த் கிஷோர் கட்சி தலைமை குறித்து எதுவும் கூறவில்லை- பா.சிதம்பரம்

புதுடெல்லி:
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், 2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக அறிக்கையை சமர்பித்தார். கட்சியை வலுப்படுத்த அவர் பல ஆலோசனைகளை வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி பல முறை ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து 2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்ட குழுவை சோனியா நியமித்தார். அதோடு பிரசாந்த் கிஷோரையும் காங்கிரசில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு இறுதிக்கட்ட ஆலோசனையும் நடத்தியது.
ஆனால் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மறுத்துவிட்டார். இதற்கு அவர் பிரியங்கா காந்தியை தலைவராக நியமிக்க வலியுறுத்தியதும், அதை காங்கிரஸ் மறுத்ததும் தான் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸிடம் அளித்தது மிக முக்கியமான தரவுகள். காங்கிரஸ் சந்திக்கவுள்ள தேர்தல்கள், முக்கிய வேட்பாளர்கள், வாக்கு அமைப்புகள், மக்கள் தொகை உள்ளிட்டவை குறித்து அனைத்து தரவுகளையும் தந்துள்ளார். இவை அனைத்தும் பிரமிக்கவைக்கக்கூடிய முக்கிய தரவுகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவருடைய அறிக்கையில் குறிப்பிட்ட சில அம்சங்களை செயல்படுத்தவேண்டும் என நாங்களும் கருதுகிறோம்.
ஆனால் அவர் கட்சி தலைமை குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை. பிரியங்கா காந்தியை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கூறவில்லை.
பிரசாந்த் கிஷோர் ஆலோசகராகவே கட்சிக்கு செயல்பட விரும்புகிறார். அவர் ஏற்கனவே தெலுங்கானா ராஷ்டிரா சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், ஜகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆலோசகராக செயல்படுகிறார். அவர் காங்கிரஸில் இணைந்தால் இந்த கட்சிகளுடனான உறவு பாதிக்கப்படும். மேலும் ஐபேக் அமைப்புடனான அவர் உறவையும் அவர் வரையறுக்க வேண்டியது வரும்.
ஆனால் அவர் கொடுத்த ஆலோசனையை காங்கிரஸ் உடனே சிந்தித்து செயல்படுத்த வேண்டும். ஆகஸ்டு வரை காத்திருப்பது தாமதமாகி விடும். 
இவ்வாறு பா. சிதம்பரம் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.