ஹிந்தி தேசிய மொழியா இல்லையா : மோதிக் கொள்ளும் வட – தென்னிந்திய நடிகர்கள்

பெங்களூரு : மொழி பிரச்னையை வைத்து அரசியல் தான் நடக்கிறது என்று பார்த்தால் இப்போது இதை வைத்து சினிமாவிலும் பிரச்னை கிளம்ப தொடங்கி உள்ளது. ஹிந்தி தொடர்பாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் பதிவிட்ட கருத்துக்கள் மோதல் போக்காக மாறி பேசு பொருளாகி உள்ளது.

சமீபகாலமாக எல்லா மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ஒரு மொழியில் ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு கல்லா கட்டி வருகின்றனர். தமிழில் நான் ஈ படம் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான கன்னட நடிகர் கிச்சா சுதீப் 'விக்ராந்த் ரோணா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடுகிறது.

இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுதீப், “ஹிந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை எடுக்கிறார்கள். பிற மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றி காண்பதில்லை'' என்றார்.

இதற்கு ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‛‛ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் பின் எதற்காக உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள் சகோதரர் கிச்சா சுதீப். ஹிந்தி என்றுமே நமது தாய் மொழி, தேசிய மொழியாக இருக்கும்'' என்றார்.

இதற்கு சுதீப் அளித்துள்ள பதிவில், ‛‛நான் பேசியதன் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உங்களை நேரில் சந்திக்கும் போது அதற்கான காரணத்தை விளக்குகிறேன். யாரையும் புண்படுத்த நான் அப்படி சொல்லவில்லை. நீங்கள் ஹிந்தியில் பதிவிட்டது எனக்கு புரிந்தது. காரணம் நாங்கள் ஹிந்தியை நேசித்து கற்றோம். அதேசமயம் நான் எனது பதிலை கன்னடத்தில் பதிவிட்டிருந்தால் நிலைமை எப்படி இருக்கும். உங்களால் எப்படி அதை புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில் தான் இருக்கிறோம்'' என்றார்.

அஜய் தேவ்கன் கூறுகையில், ‛‛சுதீப் நீங்கள் எனது நண்பர். தவறான புரிதலை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. சினிமாவை எப்போதும் ஒன்றாகவே பார்க்கிறேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம். அதே சமயம் எங்கள் மொழியை அனைவரும் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்'' என்றார்.

மொழியை வைத்து இவர்கள் பற்ற வைத்த நெருப்பு இவர்களுக்குள் அணைந்துவிட்டது. இருவரும் பரஸ்பரமாக புரிந்து கொண்டு தெளிவாகி, தங்களது நட்பை வளர்த்து கொள்ள தொடங்கிவிட்டனர். ஆனால் இவர்கள் பற்ற வைத்த நெருப்பு இப்போது இரு மொழிகளில் புகைய தொடங்கி உள்ளது. இதை வைத்து கன்னட மற்றும் ஹிந்தி திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.