மதுரை கட்சிப் பதவி: நால்வர் போட்டியிட முன்வந்தும் கூட செல்லூர் ராஜூ போட்டியின்றி தேர்வானது எப்படி?

மதுரை: மதுரை மாநகர மாட்டச் செயலாளர் பதவிக்கு செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து 4 பேர் போட்டியிட விருப்பமனு வழங்கிய நிலையிலும் மீண்டும் அவர் மாநகர மாவட்டச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து இருப்பதால், அவரை எதிர்த்து போட்டியிட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியும், விரக்தியும் அடைந்துள்ளனர்.

மதுரை மாநகர மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மீண்டும் போட்டியிட்டார். மற்ற மாவட்ட நிர்வாகிகளும் அவரவர் பதவிகளுக்கு மீண்டும் போட்டியிட விருப்பமனு வழங்கினர். தேர்தலை நடத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி. கந்தன்,ஜெ., பேரவை துணை செயலாளர் பெரும்பாக்கம் இ.ராஜசேகர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக மதுரைக்கு வந்திருந்தனர்.

செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து மாநகர் மாவட்டச் செலயாளர் பதவிக்கு போட்டியிட முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.ராஜாங்கம், முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய ஜெ., பேரவை மாநகர செயலாளருமான எஸ்எஸ் சரவணன், முன்னாள் மண்டலத் தலைவரும், பகுதி செயலாளருமான கே.சாலை முத்து, முன்னாள் ஜெ., பேரவை செயலாளரும், பகுதி செயலாளருமான வி.கே.மாரிச்சாமி ஆகியோர் விருப்பமனு வழங்கி இருந்தனர்.

மாவட்டச் செயலாளராக போட்டியின்றி செல்லூர் கே.ராஜூ மாநகர் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் முடிவு செய்திருந்த நிலையால் அவர்கள் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து போட்டியிட வந்தவர்களிடம் விருப்ப மனுக்களை வாங்க மறுத்தனர். அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெற்றுக் கொண்டனர். அதனால், மாநகர் மாவட்டச் செயலாளரை முடிவு செய்ய தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மீண்டும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக செல்லூர் கே.ராஜூ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அவைத் தலைவராக அண்ணாத்துரை, இணை செயலாளராக குமுதா, துணைச் செயலாளர்களாக வில்லாபுரம் ராஜா, இந்திரா, பொருளாளராக பா.குமார், பொதுக்குழு உறுப்பிரன்களாக கு.திரவியம், ரவிச்சந்திரன், சண்முகவள்ளி, சக்திமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகள் பட்டியிலில் செல்லூர் கே.ராஜூவின் எதிர்கோஷ்டி நிர்வாகிகள் யார் பெயரும் இடம்பெறவில்லை. இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ”கட்சித் தலைமை தற்போதைக்கு அவசர பொதுக்குழுவை கூட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த பதவிகளில் இருந்தவர்களே தொடரட்டும் என்ற நிலைப்பாடோடு அவசரம் அவரமாக அமைப்பு தேர்தலை பெயரளவுக்கு நடத்தி முடித்திருக்கிறது. இது மதுரையில் மட்டுமில்லை தமிழகம் முழுவதுமே இந்த அடிப்படையில்தான் அமைப்பு தேர்தல் நடந்துள்ளது. அதனாலே மதுரை மாநகர மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து விருப்பமனு கொடுத்தவர்களை அழைத்து கட்சித் தலைமை பேசி, பின்னர் பதவிகள் வழங்கப்படுவதாக வாக்குறுதி அளித்து அவர்கள் விருப்பமனுக்களை வாபஸ் பெற வைத்துள்ளனர்.

கட்சித் தலைமையே அழைத்து பேசியதால் அதிருப்தி நிர்வாகிகள் அமைதியாகிவிட்டனர். ஆனால், இனி செல்லூர் கே.ராஜூ தன்னை எதிர்த்து போட்டியிட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் கட்டம் கட்ட ஆரம்பிப்பார். அதனால், மீண்டும் மாநகர அதிமுகவில் கோஷ்டிபூசல் ஏற்படதான் செய்யும். அதை தவிர்க்க முடியாது. கட்சியில் தங்களை தக்க வைக்க முடியாதவர்கள் மாற்று கட்சிகளை நோக்கி போகதான் செய்வார்கள். அவர்களை தக்கவைக்க வேண்டும் என்ற கட்சித் தலைமை முடிவு செய்தால் அவர்களுக்கு ஏதாவது பதவிகள் வழங்கியில் கட்சியில் முக்கியத்துவம் வழங்க வேண்டும். வழங்கவிட்டால் மாநகரில் கட்சி இன்னும் பலவீனமடைய வாய்ப்பிருக்கிறது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.