மத்திய அரசின் திட்டங்கள் குறித்து 28 மாநிலங்களில் பிரச்சாரம்- மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி:
ஒன்பது மத்திய அமைச்சகங்களின் மக்கள் நலத்திட்டங்கள்  மூலம் தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்டங்களில் உள்ள பயனாளிகள் நேரடியாக பயன்பெறும் வகையில் 90 நாள் பிரச்சாரத் திட்டத்தை மத்திய  ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 17 திட்டங்களின் மூலம் விரைவான முறையில் பயனாளிகளுக்கு நேரடியாக உதவி செய்வதே இதன் பிரச்சாரத்தின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மக்களை திட்டங்களின் பலன்கள் நேரடியாக சென்றடையும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் உள்ள 75 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் இந்த பிரச்சாரத்தின்போது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று நாட்டிற்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்த 99 சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தும் எடுத்துக் கூறப்படுகிறது. 
நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி கிரிராஜ் சிங், சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி உழைத்து வருகிறார் என்றார். 
இன்று தொடங்கப்பட்டுள்ள பிரசாரம் வெற்றியடைய 9 அமைச்சகங்களும் பொதுமக்களின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி, மக்களுக்குத் தெரியாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் உள்ளனர், அவர்களை நினைவுகூரவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களின் கிராமத்தை மேம்படுத்தவும் இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல், இந்த பிரச்சாரத்தின் மூலம், அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.