மணல் கொள்ளை || தமிழக அரசுக்கு திமுகவின் கூட்டணி கட்சி விடுத்த கோரிக்கை.!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் நேற்று (27.4.2022) மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு :-

மணல் கொள்ளை நடைபெறாமல் தடுத்திட, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மணல் அள்ளும் ஒப்பந்தத்தை ரத்து செய்திட தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் பாலாறு, காவிரி, தென்பெண்ணை, கெடிலம் உள்ளிட்ட ஆற்றுப்பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற தொழிலாளர்கள் மாட்டு வண்டி மூலம் கிராமப்புற தேவைகளுக்கு மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு  காரணமாக  மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் இத்தொழிலில் கிடைத்து வந்த சொற்ப வருமானமும் இல்லாத நிலை உருவாகியது. மூடப்பட்ட குவாரிகளைத் திறக்காததால் கிராமப்புறங்களில் கட்டுமானப்பணிகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் தமிழக அரசு மாட்டு வண்டியில் மணல் எடுக்க 21 மணல் குவாரியும் லாரியில் மணல் எடுக்க 16 மணல் குவாரியும் அமைக்கப்படும் என்றும், ஒரு யூனிட் மணல் விலை ரூபாய் 1000 என்றும் கட்டணம் தீர்மானித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், எந்த மாவட்டத்திலும் மாட்டு வண்டிக்கான மணல் குவாரி திறக்கப்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் லாரிக்கான மணல் குவாரிகளுக்கான ஒப்பந்தம் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இயற்கை வளத்தை சூறையாடவும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவுமே இது பயன்படும். இதனால் அரசுக்கும் இழப்பு ஏற்படும்.

இந்த தனியார் நிறுவனமானது, தமிழக அரசு ஏற்கனவே நிர்ணயித்த ஒரு யூனிட் மணல் ரூ 1000 என்பதற்கு பதிலாக ரூ 2650 என்றும், மாட்டு வண்டிக்கு கால் யூனிட்டிற்கு ரூ 224 என்ற கட்டணத்தை தற்போது ரூ 700 ஆக உயர்த்தியும்  வசூலிக்கிறது.  மேலும், இந்த அதீத கட்டணமானது மாட்டுவண்டி தொழிலாளர்களை பெரிதும் பாதித்துள்ளது.

எனவே, தமிழகத்தில் மணல் கொள்ளை நடைபெறாமல் தடுத்திட தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மணல் அள்ளும் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து அரசே நேரடியாக குவாரிகளை நிர்வகித்திடவும், முந்தைய நடைமுறைப்படி மாட்டுவண்டியில் மணல் எடுக்க ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்திடவும் உரிய நடவடிக்கையை விரைந்து  மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.