அனல் மின் நிலையங்களில் 10 நாட்களுக்கு தேவையான நிலக்கரி உள்ளது- மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தகவல்

ராஞ்சி:
டெல்லி, ஹரியானா மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அம்மாநில அரசுகள் கவலை தெரிவித்துள்ளன.
போதிய நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது. 
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி,  அனல் மின் நிலையங்களில் சுமார் 22 மில்லியன் டன் நிலக்கரி உள்ளதாகவும், அதே நேரத்தில் 72 மில்லியன் டன் நிலக்கரி கோல் இந்தியா மற்றும் பிற நிறுவனங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். 10 நாட்களுக்குள் கூடுதல் இருப்பு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். 
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்வு காரணமாக அனல் மின் உற்பத்தி நிலையங்கள் முழுத் திறனுடன் செயல்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார். 
அனல் மின் நிலையங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது என்றும், கொரோனா பாதிப்பால் உருவான மந்த நிலைக்குப் பிறகு தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளின் தேவைகள் காரணமாக மின் தேவையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
முன்னதாக மத்திய நிலக்கரி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன்  மந்திரி ஜோஷி ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார், மேலும் நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிப்பது மற்றும் விநியோகம் குறித்து விரிவான விவாதத்தை அவர் மேற்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.