நிலத்தின் சந்தை வழிகாட்டி மதிப்பை சீரமைக்க குழு: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் முரண்பாடுகளை போக்கி, கள நிலவரத்துக்கு ஏற்ப, சந்தை வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்க சீரமைப்புக் குழு அமைக்கப்பட உள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிவுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலம் முழுவதும் கடந்த 2012 ஏப்.1-ம் தேதி முதல் சந்தைமதிப்பு வழிகாட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. இது கடந்த 2017 ஜூன் 9-ம் தேதி முதல் 33சதவீதம் குறைக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் முரண்பாடுகளை போக்கி, கள நிலவரத்துக்கு ஏற்பசந்தை வழிகாட்டி மதிப்புகளைமாற்றியமைக்க, சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக் குழுஅமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு 2 அடுக்குகளாக செயல்படும். முதலாம் அடுக்கில் உள்ள உயர்நிலைக் குழுபொதுமக்களிடம் கருத்துக் கேட்பு, கள ஆய்வு மேற்கொண்டும், மக்கள் பிரதிநிதிகள், வருவாய், உள்ளாட்சி, நகரமைப்பு, அரசு சாரா அமைப்புகளுடன் கலந்தாய்வு நடத்தியும் உண்மையான சந்தை மதிப்பை பிரதிபலிக்கும் வகையிலான வழிகாட்டி மதிப்பை கால முறையில் பரிந்துரை செய்யும்.

இந்த உயர்நிலைக் குழுவைபதிவுத் துறை அமைச்சர் தலைமையிலான வழிகாட்டும் குழு வழிநடத்தும். சீரமைப்புக் குழுவால் வழிகாட்டி மதிப்பு பரிந்துரைக்கப்படும். சம்பந்தப்பட்ட மாவட்ட மதிப்பீட்டுக் குழுக்கள், மாநில மதிப்பீட்டுக் குழுவால் வழிகாட்டி மதிப்புகள் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்பட்டுமாநிலம் முழுவதும் சீரமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆவணத்தில் உண்மையான சந்தை மதிப்பை மக்கள் கடைபிடிக்கவும், அரசுக்கு வரவேண்டிய சரியான வருவாயை பதிவுத் துறை ஈட்டித் தரவும் இது உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.