`சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் இவையெல்லாம் இடம்பெறுமா?' – எதிர்பார்ப்பில் ஃபிசியோதெரபிஸ்ட்கள்

“ஃபிசியோதெரபிஸ்ட்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் வாய்ப்பையும் தற்போதைய தமிழக அரசாவது வழங்குமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்…” என்ற கவலை தோய்ந்த குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஃபிசியோதெரபி

”தமிழக ஃபிசியோதெரபிஸ்ட்கள் மக்கள் நலனுக்காகவும், தங்கள் எதிர்காலத்துக்காகவும் முக்கியக் கோரிக்கைகளை நீண்டகாலமாக தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க அரசாவது எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும்” என எதிர்பார்த்து இருக்கிறார்கள், இயன்முறை மருத்துவர்கள் என்றழைக்கப்படும் ஃபிசியோதெரபிஸ்ட்கள்.

இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார், இந்திய ஃபிசியோதெரபிஸ்ட் அசோசியேஷனின் தமிழக தலைவர் கிருஷ்ணகுமார்.

“ஃபிசியோதெரபி மருத்துவம் உடல் இயக்க குறைபாடுகளில் இருந்தும், தசை மற்றும் தசை நார் சம்பந்தப்பட்ட காயங்களில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து வருகிறது.

கிருஷ்ணகுமார்

ஃபிசியோதெரபிஸ்ட்கள் ஏன் முக்கியம்?

ஒவ்வொருவரின் உடல் தகுதியை மேம்படுத்தி, அவர்கள் தங்களது உடல் நலனை தாங்களே கவனித்துக்கொள்ளும் திறனை ஃபிசியோதெரபிஸ்ட்கள் உருவாக்குகிறார்கள்.

சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, ஆறு பேரில் ஒருவர் இறப்பதற்குக் காரணமாகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்கள், பல்வேறு உடல் இயக்க சிக்கல்கள், தசை வலுவிழத்தல், வலி எனப் பல பிரச்னைகளை உருவாக்குகின்றன. இந்தச் சூழலில், ஃபிசியோதெரபிஸ்ட்களின் பங்களிப்பு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அதிக அளவில் அவசியமாகிறது.

மத்திய, மாநில அரசுகளின் முடிவுகள்…

இந்நிலையில், ‘மாநில ஃபிசியோதெரபி கவுன்சில்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு National Allied and Health Care professionals – (NCAHP Act) சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதில் ஃபிசியோதெரபி உட்பட 55 தொழில் சார்ந்தவர்கள் பதிவு செய்து கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப சரத்துகளை இதில் இடம்பெறச் செய்ய முயலும். மத்திய அரசு நிறைவேற்றி உள்ள சட்டத்தில் இடம்பெற்றுள்ள நல்ல சரத்துகளை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Physiotherapy awareness rally

தனித்துறையாக ஃபிசியோதெரபி…

புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் தி.மு.க அரசு, தமிழகத்தில் அதிகளவில் ஃபிசியோதெரபிஸ்ட்கள் இருப்பதை கருதி ‘Independent Physiotherapy Council’ அமைக்க முன்வர வேண்டும். ஏற்கெனவே இது சம்பந்தப்பட்ட அரசாணைகள் அமலில் உள்ள நிலையில் இது குறித்து சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து உரிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஃபிசியோதெரபியை தமிழக அரசு தனித்துறையாக (Independent System Of Medicine) அங்கீகரிக்க வேண்டும். இது எங்களது நீண்ட நாள் கோரிக்கை மட்டுமன்றி, இது நிறைவேற்றப்படும்போது அது சார்ந்த ஆராய்ச்சிகள் அதிகரித்து சமூக ஆரோக்கிய மேம்பாடு அதிகமாகும். இந்தியாவில் முன்மாதிரியாக இதைச் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

ஆலோசனைக் குழுவில் ஃபிசியோதெரபி பிரதிநிதிகள்…

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களையும் பதிவு செய்ய, பொது சுகாதார விதிகள் அடிப்படையில் ‘தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறை சட்டம்’ கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் விரும்பத்தகாத குழப்பங்கள் நிறையவே இருந்தன. எங்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைத்தும் அக்குழப்பங்கள் தீர்க்கப்படவே இல்லை.

உதாரணமாக, ஃபிசியோதெரபி கிளினிக்குகளில் எந்தெந்த மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டும் என்ற பட்டியல், மற்ற மருத்துவத் துறை பட்டியலில் இடம் பெற்றிருந்தன. மேலும், மாநில அளவிலான ஆலோசனைக் குழுவில் ஃபிசியோதெரபி பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு கடந்த ஆட்சியில் தரப்படவில்லை.

மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஆலோசனை குழுக்களில், மருத்துவமனைகளை ஆய்வு செய்யச் செல்லும் குழுக்களில் ஃபிசியோதெரபிஸ்ட்கள் இடம் பெற நடப்பு ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரபட்சங்கள் காட்டாது ஆய்வுகளை விரைந்து நடத்தி, பதிவு சான்றிதழ்களை பதிவு செய்த ஃபிசியோதெரபி கிளினிக்குகள் அனைத்துக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுப்பூதியம், ஊக்கத்தொகை, நிரந்தரப்பணி…

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணிபுரியும் ஃபிசியோதெரபிஸ்ட்களுக்கு தொகுப்பூதியம், ஊக்கத்தொகை நியாயமான அளவில் வழங்க வேண்டும்.

மருத்துவத் துறையில் உள்ள தொகுப்பூதிய பணிகள் அனைத்துக்கும் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு இப்பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக கால ஊதிய அடிப்படையில் தரம் உயர்த்த, கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டும்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் உள்ள நிறுவனங்களில் உள்ள அனைத்து ஃபிசியோதெரபி பணியிடங்களும் ஃபிசியோதெரபிஸ்ட் கிரேடு பணியிடங்களாக மட்டுமே இருக்க வேண்டும். ஃபிசியோதெரபிஸ்ட் டெக்னிஷியன் பணியிடங்களை ஃபிசியோதெரபிஸ்ட் கிரேடு பணியிடங்களாக தரம் உயர்த்திட வேண்டும்.

பிசியோதெரபி

அரசு மருத்துவமனை ஃபிசியோதெரபி நடைமுறைகள்

அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் நோயாளிகள் நேரடியாக ஃபிசியோதெரபி துறைக்குச் சென்று தங்களுக்குத் தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக, ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வெளிநோயாளியாக வரக்கூடியவர்களில் 70 சதவிகிதம் பேர் தசை, தசை நார்களில் உண்டாகும் உடல் இயக்க சிக்கல்கள் மற்றும் வலி போன்ற உபாதைகளுக்காக வருகிறார்கள். இவர்களது பிரச்னைகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், நிரந்தர உடல் இயக்கக் குறைபாடுகளால் பாதிக்கப்படாமல் தடுக்கப்படுவார்கள்.

மேற்சொன்ன நியாயமான, அவசியமான கோரிக்கைகளை அங்கீகரிக்கும் கொள்கை முடிவுகள் சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன் தமிழக ஃபிசியோதெரபிஸ்ட்கள் அனைவரும் உள்ளனர்” என்றார்.

கிராம மக்களுக்கு ஃபிசியோதெரபி…

மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களிடம் இது குறித்துப் பேசினோம். “கிராமங்களில் உள்ள மக்கள் தசை பிடிப்பு உள்ளிட்ட தசை பாதிப்பு நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அப்பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஃபிசியோதெரபிஸ்ட்களை நியமித்து சிகிச்சை அளிக்கலாம். இதனால் மருத்துவர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலும் மக்கள் அரசு மருத்துவமனையை தேடி நகரங்களை நோக்கி வரவேண்டிய அவசியமில்லை. தனியாரிடம் செல்ல வேண்டியதில்லை.

பிசியோதெரபி

மாநில ஃபிசியோதெரபி கவுன்சில்

மேலும், நான்கரை வருட பிசியோதெரபி கோர்ஸை முடித்தவர்களுக்கே சரியான அரசு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், குறுகிய கால ஃபிசியோதெரபி கோர்ஸ் முடித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த, ஒழுங்குபடுத்த வேண்டுமென்றால் மாநில அளவில் ஃபிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.