உக்ரைனில் ஐ.நா. தலைவர் சென்ற இடத்திற்கு அருகே தாக்குதல் நடத்திய ரஷியா

கீவ்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 65 நாளாக சண்டையிட்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் ரஷியாவை கண்டித்து அந்நாட்டின் மீது பல்வேரு தடைகளை விதித்துள்ளன. மேலும் ரஷியா போரை கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த போர் நிலவரங்களை பார்வையிட ஐ.நா. சபை பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் உக்ரைன் சென்றார். 
அங்கு புச்சா நகரில் ரஷிய படைகள் ஏராளமானோரை கொன்று புதைத்துள்ள புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்த அவர், இது தொடர்பாக சர்வதேச கிரிமினல் கோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், ரஷியா இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அடுத்ததாக அவர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மைய பகுதிக்கு சென்ற போது ரஷியாவின் ஏவுகணைகள் வான்வழி தாக்குதலை தொடுத்தன.
இதனை தொடர்ந்து பலத்த சத்தம் எழுந்தது.  நேற்று மாலை 5.15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலால் ஐ.நா. தலைவரும், அவரது குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
25 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலால் 2 தளங்கள் சேதமடைந்தன.  கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வான்வரை சென்றது.  தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் ஐநா தலைவர் கட்டிரெஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருந்த இடத்தில் இருந்து 3.5 கி.மீ. தொலைவில் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய ஜெலன்ஸ்கி, ஐ.நா. மற்றும் அந்த அமைப்பினை ரஷிய தலைமை அவமதிக்கிறது என்பதற்கு இந்த தாக்குதலே அதிக விளக்கம் அளிக்கும் என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.