உக்ரைன்- ரஷியா போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் மேற்கு வங்கத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் ஒட்டு மொத்தமாக 422 மாணவர்கள் உக்ரைனில் இருந்து மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களை வெவ்வேறு கல்லூரிகளில் படிப்பை தொடர அனுமதிக்குமாறு நாங்கள் மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால் அவர்களுக்கு உதவ முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. அவர்கள், போலாந்துக்கும், ஹங்கேரிக்கும் செல்லட்டும் என்றும் கூறியது. படிப்பை தொடர அவ்வளவு செலவு செய்து மீண்டும் எப்படி செல்ல முடியும்.
உக்ரைனில் இருந்து திரும்பிய 422 மாணவர்களில் 409 பேர் எம்பிபிஎஸ் படிப்பையும், மூன்று பேர் பல் மருத்துவப் படிப்பையும், ஒருவர் கால்நடை மருத்துவப் படிப்பையும் தொடர்கின்றனர்.
இவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதிய சேர்க்கைக்கான மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு எதிராக உடனடியாக கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் சலுகை அளிக்குமாறு கல்லூரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. ஆப்கானிஸ்தான்: மாணவிகள் ஹிஜாப் அணியாததால் பள்ளியை மூடிய தலிபான்கள்