சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவுக்குட்பட்ட மணக்குளம் கிராமம் வலையனோடைக் கண்மாய்ப் பகுதியில் கிடக்கும் கற்கள் வித்தியாசமாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்படி, பாண்டியநாடு பண்பாட்டு மையம் வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அங்கு பெருங்கற்காலத்தில் இரும்பு உருக்காலை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
கண்மாய்ப் பகுதியில் இரண்டு உருக்காலைகளும் ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகளும், பல துண்டுக் குழாய்களும் மேற்பரப்புக் கள ஆய்விலேயே கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆய்வைப் பற்றி வரலாற்றுப் பேராசிரியர்களிடம் பேசினோம்,
மேலும் அப்பகுதியில் ஏராளமான கறுப்பு-சிவப்புப் பானை ஓடுகளும் , இரும்பு உருக்கு கழிவுகளும், இரும்புத்துகள் படிமங்களும் காணப்படுகின்றன. மேலும், இந்தப் பகுதியில் அதிக அளவில் கிடைக்கும் செம்பூரான் பாறையில் இரும்பு கலந்திருப்பதையும் அதனை எரியூட்டி உருக்கினால் இரும்புப்பொருள்கள் செய்யலாம் என்ற வித்தையையும் அக்காலமக்கள் அறிந்து வைத்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
இதன்மூலம் பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள் இரும்புப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியைப் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதலாம். இது சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக்காலப் பகுதியாக இருக்கலாம்.
இப்பகுதி ஆதிமனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கக் கூடும் என்றும் அனுமானிக்கப்படுகிறது” என்றனர்.