கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – ஜெயலலிதாவின் நிழலாக அறியப்பட்டவரிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு வாரங்களாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி இது வரை விசாரிக்கப்படாத நபர்களை விசாரணை வளையத்திகுள் கொண்டு வந்துள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, ஆறுகுட்டி உதவியாளர் நாராயணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக அம்மா பேரவை மாவட்ட இணை செயலாள் அனுபவ் ரவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை சென்று சசிகலாவிடம் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையை தொடர்ந்து கோவை திரும்பிய தனிப்படை போலீசார் கூடலூரை சேர்ந்த அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனிடம் விசாரணை மேற்கொண்டனர். சஜீவனிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சஜீவனின் சகோதரர் சிபியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
image
அடுத்தடுத்து இதுவரை விசாரணை வளையத்திற்குள் வராத முக்கிய பிரமுகர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்கே பூங்குன்றன் விசாரணைக்காக காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு வந்தார். பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு, போயஸ்கார்டன் என ஜெயலலிதா தங்கி இருக்கும் இடங்களில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவைச் யாரெல்லாம் சந்திக்கிறார்கள், எது தொடர்பாக சந்திக்கிறார்கள் என்பதும், யாரைல்லாம் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதையும் பார்த்துக்கொள்பவராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவிற்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் தொகுத்து அவரது பார்வைக்கு கொண்டு செல்வது உட்பட அனைத்து பணிகளையும் பார்த்து கொண்டவர்.
image
கோடநாடு பங்களாவில் பணிக்கு நியமிக்கபட்டவர்கள் குறித்தும் கோடநாடு பங்களாவில் உட்புற வேலைபாடுகளை செய்த சஜீவனின் பங்கு குறித்தும் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் என்பதால் பூங்குன்றனிடம் இன்று நடத்தப்படக்கூடிய விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.