வாஷிங்டன்,
ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகிற மே 24ந்தேதி குவாட் உச்சி மாநாடு நடைபெறும் என ஜப்பான் அறிவித்து உள்ளது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன.
இதனை முன்னிட்டு ரஷியாவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு இந்த மாநாட்டில் பைடன் அழைப்பு விடுப்பாரா? என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி பதிலளித்துள்ளார்.
அவர் கூறும்போது, அந்த கூட்டத்தில் இதுபற்றிய உணர்வுகளை நாங்கள் வெளிப்படுத்துவோம். இந்த கூட்டம் நடைபெறுவதற்கு இன்னும் பல வாரங்கள் உள்ளன. அதனால், நிச்சயம் நிறைய விசயங்கள் நடைபெறும். நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம். என்ன நிலைப்பாடு போன்றவற்றை சரியான நேரத்தில் அதிபர் பைடன் நிச்சயம் தெரியப்படுத்துவார் என்று கூறியுள்ளார்.
வருகிற மே 20ந்தேதி முதல் 24ந்தேதி வரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.
இதில், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார். இந்தோ-பசிபிப் பகுதியில் ஒரு வெளிப்படையான மற்றும் திறந்த நிலையிலான பைடன்-ஹாரிஸ் அரசின் உறுதியான ஈடுபாட்டை முன்னேற்றம் அடைய செய்யும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமையும் என்று கூறினார்.
தென்கொரிய அதிபர் யூன் சுக் யியோல் மற்றும் ஜப்பானிய பிரதமர் கிஷிடா புமியோ ஆகியோருடனும் பைடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக டோக்கியோவில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் குழுவின் தலைவர்களையும் பைடன் சந்திக்க இருக்கிறார்.