போலீஸ் ‘இன்பார்மர்’ சுட்டுக் கொலை: சட்டீஸ்கரில் நக்சல்கள் அட்டூழியம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் நிலவாயா என்ற கிராமத்தை சேர்ந்த ஹரேந்திர கோரம் என்பவரின் வீட்டிற்கு வந்த நக்சல் கும்பல், அவரை வனப்பகுதிக்கு துப்பாக்கி முனையில் அழைத்து சென்றது. அதன்பின், அதேபகுதியில் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டது. தகவலறிந்த நக்சல் தடுப்பு படை போலீசார் ஹரேந்திர கோரத்தின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தண்டேவாடா எஸ்பி சித்தார்த் திவாரி கூறுகையில், ‘ஹரேந்திர கோரத்தை 12 பேர் கொண்ட நக்சல் கும்பல் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அவர் போலீசுக்கு ரகசிய தகவல்களை தெரிவித்து வருவதாகவும், அவரை போலீஸ் இன்பார்மர் எனக்கூறியும் சுட்டுக் கொன்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்’ என்றார். இந்த நிலவாய கிராமத்தில் கடந்த 2018 சட்டமன்ற தேர்தல் நேரத்தில், அரன்பூர் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ருத்ரபிரதாப் சிங், பத்திரிகையாளர், நக்சல் தடுப்பு வீரர் ஆகியோர் நக்சல்களால் கொல்லப்பட்டனர். அன்று முதல் இன்று வரை இந்த கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை கூட அரசால் முடிக்க முடியவில்லை. மலங்கிர் பகுதியில் அதிநவீன ஆயுதங்களுடன் அரண்பூர் காடுகளில் இருந்து சிர்மூர் பகுதிக்கு நக்சல்கள் தாராளமாக நடந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.