சென்னை:
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை பேரூரில் உள்ள தமிழ் கல்லூரி விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ஆன்மீகம்தான் தமிழை வளர்த்தது ஆன்மீகம் இல்லாமல் தமிழ் வளர்ச்சி கிடையாது. தமிழால் அனைத்தும் முடியும் என்று ஆன்மீக மடங்கள் சொல்கின்றன. தமிழகத்தில் காவி பெரியது தேசிய வலியது. நான் சொல்வது ஆன்மீகத்தை குறிக்கவும். சாமியார்கள் அணியும் காவியையும், தேசிய கொடியின் காவியையும் சேர்த்துதான் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை முடக்கி வைத்திருப்பதை கண்டித்து சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்
கே.எஸ்.அழகிரி
பேசினார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வெண்மைக்கு தான் என்றும் மரியாதை உண்டு. காவி காலித்தனம் செய்வது. அதற்கு தமிழகத்தில் மரியாதை இல்லை. இடமும் கிடையாது. தமிழகத்தில் காங்கிரசுக்கு வேர் உண்டு ஆனால் பா.ஜனதாவுக்கு நிழல் கூட கிடையாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வலிமையான ஒரு திராவிட கட்சியோடு கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றியும் பெற்றது. ஆனால் காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது என்பதை பா.ஜனதாவினர் நினைவில் கொள்ள வேண்டும்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா தொடர்பான தீர்மானத்தை கவர்னர் ரவி ஜனாதிபதிக்கு அனுப்பாமல் வைத்திருப்பது அவரது அதிகாரத்தை மீறிய செயலாகும். தமிழகத்தில் நல்லாட்சியை மு.க.ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கிறார் அவர் வளர்ச்சித் திட்டங்களின் மீது கவனம் செலுத்தாமல் இருக்கவேண்டும் என்பதற்காக கவர்னர் மூலம் இடையூறு செய்து கொண்டிருக்கிறார் மோடி. பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் மோடியை விரட்டி அடித்தவர் மு.க.ஸ்டாலின். தேர்தலில் எதிர்கொள்ள முடியவில்லை என்பதால் சித்தாந்த ரீதியாக உடைக்க பார்க்கிறார். புதுவையில் அரங்கேற்றியதைப்போல் வளர்ச்சிப் பணிகளை தடுத்துவிட்டு தமிழக அரசு எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை என்று பொய் பிரசாரத்தில் ஈடுபட மோடி திட்டமிட்டுள்ளார். கவர்னர் மூலம் ஆழம் பார்க்கும் மோடியின் கனவு பலிக்காது.
காங்கிரஸ் ஒருபோதும் கவர்னர் பதவிக்கு எதிரானது அல்ல. கவர்னர் தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும். அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறோம். கவர்னர் தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.க்கள் ஜெயக்குமார், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத் எம்.எல்.ஏ.க்கள் கு.செல்வப்பெருந்தகை ரூபி மனோகரன், அசன் மௌலானா ஈ.வே.ரா. திருமகன், துரை சந்திர சேகரன் ராஜேஷ்குமார், முனிரத்தினம், மாநில நிர்வாகிகள் கோபண்ணா சி.டி. மெய்யப்பன் கீழானூர் ராஜேந்திரன் மயூரா ஜெயக்குமார் கோபண்ணா, சிரஞ்சீவி மகளிர் அணி தலைவி வக்கீல் சுதா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ். திரவியம் நாஞ்சில் பிரசாத் எம்.ஏ. முத்தழகன், டில்லிபாபு, சிவராஜசேகரன் ஏ.ஜி. சிதம்பரம் மற்றும் ரங்கபாஷ்யம் மயிலை தரணி ஹேமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.