இந்தியாவில் சமீபகாலமாக முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், “அரசியலில் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற மதம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக நமது அண்டை நாடு மக்களுக்கு மதத்தின் பெயரால் துப்பாக்கிகள் வழங்கியது. ஆனால் அதன் தாக்கம் இன்றுவரை உள்ளது. நம் நாட்டிலும் அதுதான் நடக்கிறது. மதத்தின் பெயரால் மக்களுக்கு புல்டோசர்களும், வாளும் கொடுக்கப்படுகிறது.
மக்களுக்கு வேலை, மின்சாரம், தண்ணீர் வழங்க முடியாமல் மத்திய அரசு தனது இயலாமையை மறைக்க முயல்கிறது. இன்னும் அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசால் முடியவில்லை.
எனவே, இந்த சிக்கல்களைச் சமாளிப்பதை விட இந்துக்களும், இஸ்லாமியர்களும் மோதிக் கொள்வதும், ஒலிபெருக்கி, ஹிஜாப், ஹலால் என்று மத அரசியல் பேசுவதும் மிக எளிது. மேலும், இது தொடரும். எதிர்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும்.
தற்போது காஷ்மீர் ஒரு ஆய்வகமாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை புல்டோசர்கள் அழித்துவிட்டதால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் அவதிப்படுகின்றனர். எங்களை எங்கும் செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள். தலைவர்களின் பாதுகாப்பு பறிக்கப்படுகிறது… அரசியல் செயல்முறை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.