எழும்பூர் ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருவான்மியூர், பெருக்குடி, வேளச்சேரி உள்பட பறக்கும் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் சாதாரண உடையில் சென்று தீவிரமாக கண்காணித்தனர்.
வயதான பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் குறித்து காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதன் பின்னர், கடந்த10 நாட்களுக்கும் மேலாக தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வயதான பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நகையை பறித்து ஓடியுள்ளார். அவரை தனிப்படை காவல்துறையினர் துரத்தி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மயிலாப்பூரைச் சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான ஜெயராமன் என்பது தெரியவந்துள்ளது. இவர் தான் 5 தங்க நகை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகளை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயராமன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்துள்ளவர் என்பதும், ஆன்லைன் ரம்மி மீண்டும் மீண்டும் விளையாட பணம் இல்லாததால் தங்க நகைகளை பறித்து வந்தது தெரிய வந்தது. ஆன்லைன் ரம்மியால் நாளொன்றிற்கு 20,000 ரூபாய் வரை இழந்ததால், தங்க நகை பறித்து அதனை விற்று ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தது தெரிய வந்தது.
வயதான பெண்களால் தன்னை துரத்தி பிடிக்க முடியாது என்பதால் வயதான பெண்களை குறி வைத்து நகை பறித்ததாக கைதான ஜெயராமன் வாக்குமூலம் அளித்துள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர், ஜெயராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.