மைசூரு:காய்கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க, மைசூரு பொறியியல் கல்லுாரி மாணவர்கள், சோலார் பேனல் மூலம் இயங்கும் குளிரூட்டும் பெட்டி கொண்ட மிதி வண்டியை வடிவமைத்துள்ளனர்.
காய்கறிகளை விற்பனை செய்பவர்கள், அன்றைய தினமே விற்பனை செய்துவிட வேண்டும். இல்லையெனில், அழுகிவிடும். முதலீடு செய்து வாங்கும் காய்கறிகளில், மாலை வரை விற்பனையாகாமல், பல வியாபாரிகள் கால்நடைகளுக்கு கொடுக்கின்றனர் அல்லது சாலையில் வீசி விட்டு சென்றுவிடுகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், மைசூரு வித்யாவர்த்தகா பொறியியல் கல்லுாரி மூன்றாம் ஆண்டு மெக்கானிக் பிரிவு மாணவர்கள் நவீன், சுபம் சைன், சுப்ரீத், விவேக் சந்திரசேகர் மிதி வண்டியில் சோலார் பேனல் மூலம் இயங்கும் குளிரூட்டும் பெட்டியை தயாரித்துள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளையும் பற்றி ஆராய்ந்து, சாத்தியமான மற்றும் வசதியான தீர்வைக் கொண்டு வர விரும்பினோம்.நாங்கள் நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெற்றோம். பின் ஒரு -குளிரூட்டப்பட்ட பெட்டி மற்றும் மின்சாரத்திற்கு ஆற்றலை சோலார் பேனல் மூலம் கொண்டு வந்தோம். இதனால் இயந்திரம் தன்னிறைவாக இருக்கும்.
தற்போதைய மாடலின்படி, தள்ளுவண்டி விற்பனையாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை தங்கள் வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம். அவர்கள் வெளியே செல்லும்போது, சூரிய ஆற்றல் மூலம் மின்சார கிடைக்கும்.வரும் நாட்களில், விற்பனையாளர் வண்டியை மிதித்து இயக்கும் போது, அதிலிருந்து ஏற்படும் அழுத்தத்திலிருந்து மின்சாரம் கிடைப்பதாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், மின்சார வாகனங்கள் போன்று, இதில் சூரிய ஆற்றலை பொருத்தி, அதிக ஆற்றல் கொண்ட வண்டியாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம்.
தற்போது தயாரித்துள்ள இந்த வாகனத்தில் சிறிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், மிதித்து வண்டியை இயக்க சிலருக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, 19 அங்குலம் கொண்ட சக்கரங்கள் பொருத்த திட்டமிட்டுள்ளோம்.படிப்பையும், தயாரிப்பையும் ஒருசேர சமமாக திட்டமிட்டு செயல்பட்டதால், இத்தகைய சாதனை செய்ய முடிந்தது. எங்களுக்கு ஆதரவு கிடைத்தால், இதுபோன்று பல திட்டங்களை செயல்படுத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement