பட்டியாலா (பஞ்சாப்): பட்டியாலாவில் நடந்த காலிஸ்தான் எதிர்ப்பு பேரணியின் போது இரு பிரிவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நகரில் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பாக ஹரிஷ் சிங்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த காலிஸ்தான் எதிர்ப்பு அணிவகுப்பின் போது இரண்டு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பட்டியாலா நகரத்தில் உள்ள காளி கோயிலுக்கு வெளியே இரண்டு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மோதல் காரணமாக நகரில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிவசேனா (பால் தாக்கரே) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் தலைவர் ஹரிஷ் சிங்லா என்பவர் காலிஸ்தான் முர்தாபாத் அணிவகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த அணிவகுப்பு ஆர்ய சமாஜ் சவுக்கில் இருந்து தொடங்கியது. சிவசேனா தொண்டர்கள் காலிஸ்தான் முர்தாபாத் கோஷத்தை எழுப்பியபடி சென்றனர். அணிவகுப்பு காளி கோவில் அருகே சென்ற போது, காலிஸ்தான் சார்பு என்று நம்பப்படும் சீக்கியக் குழு ஒன்று அவர்களை நேருக்கு நேர் எதிர் கொண்டது. அப்போது இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் வாள், கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக ஹரிஷ் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வன்முறை குறித்து மாநில முதல்வர் பகவந்த் மான்,” பட்டியாலாவில் நடந்த மோதல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நான் காவல்துறைத் தலைவருடன் பேசினேன். அப்பகுதியில் அமைதி திரும்பி உள்ளது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மாநிலத்தில் யாரும் குழப்பத்தை உருவாக்க அனுமதிக்க மாட்டோம். பஞ்சாபின் அமைதி, நல்லிணக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.
போலீஸாரின் அனுமதியின்றி சிவசேனா (பால் தாக்கரே) அணிவகுப்பை நடத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.