கடந்த 2020-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ராவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவரின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், ஹேம்நாத் கடந்த 25-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், “என் மனைவி சித்ரா இறந்ததும் நானும் இறந்துவிடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், என் மனைவியைக் கொலை செய்தது நான்தான் என்று என்மீது பழி சுமத்தப்பட்டது. நான் எந்தக் குற்றமும் செய்யாதவன் என்பதை நிரூபிக்கத்தான் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
சித்ராவின் மரணத்துக்கு முன்னாள் அமைச்சர், அரசியல்வாதி, தொழிலதிபர் ஒருவர் ஆகியோர்தான் காரணம். என் மனைவியின் தற்கொலைக்குப் பின்னணியில் பெரும் பணபலமிக்க கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும். சித்ராவின் மரணத்துக்குக் காரணமானவர்களிடம் பணம் பறிக்க ஒரு கும்பல் முயன்றுவருகிறது. அதற்கு நான் ஒத்துழைக்கவில்லையென்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவருகிறார்கள்.
அந்தக் கும்பலுக்குப் பயந்து தற்போது எனது வழக்கறிஞர் வீட்டில் தங்கியிருக்கிறேன். சித்ராவின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் பெயர்களைச் சொன்னால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அந்த அரசியல்வாதி தரப்பு என்னை மிரட்டிவருகிறது. இரண்டு தரப்பினரிடமிருந்தும் எனக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், என் மனைவி இறப்பதற்கு முன்பாகக் கூறிய தகவல்களை வெளியிடுவேன்” என்று ஹேம்நாத் குறிப்பிட்டிருக்கிறார்.